குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
யாழ்ப்பாணத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் ஹாவா குழுவினை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவே உருவாக்கினார் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்றைய தினம் பங்கேற்ற போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஹாவா குழுவிற்கும் இராணுவப் படையினருக்கும் தொடர்பு உண்டு என தாம் ஒருபோதும் கூறவில்லை எனவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவும், உயர் இராணுவ அதிகாரியும் இணைந்து ஹாவா குழுவினை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
குறித்த உயர் இராணுவ அதிகாரி பற்றிய விபரங்களை வெளியிட முடியாது என்ற போதிலும், தேவையான இடங்களுக்கு தம்மால் தகவல் வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். வட மாகாண முதலமைச்சர், பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் போன்றவர்கள் தாம் கூறியதனை சரியாக புரிந்து கொள்ளாது கருத்து வெளியிட்டதாகவும், தாம் படைவீரர்களை குறைகூறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தின் உறுப்பினர் ஒருவர் தொடர்புபட்டிருந்தால் அது ஒட்டுமொத்த இராணுவத்தினரையும் குற்றம் சுமத்துவதாக அமையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரகீத் எக்நெலிகொட, லசந்த விக்ரமதுங்க, ஜோசப் பரராஜசிங்கம் ஆகியோரை கொலை செய்தவர்கள், பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டவர்களை படைவீரர்கள் என கூற முடியுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த நாட்டை தீயிட்டு கொளுத்தியேனும் அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்ள சில தரப்பினர் முயற்சித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இதன் காரணமாகவே சிலர் இனவாதத்தை தூண்டி வருகின்றார்கள் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.