குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழியைப் பின்பற்றிய அமெரிக்க ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலரி கிளின்ரன் தேர்தலில் தோல்வியடைந்தார் என அரசியல் ஆய்வாளரும் முன்னாள் ராஜதந்திரியுமான தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
2015ம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன பின்பற்றிய யுக்திகளையே ஹிலரி பின்பற்றியதாகவும் எனினும் ஹிலரியின் இந்த யுக்தி கைகொடுக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறுபான்மை மக்களின் வாக்குகளை உச்ச அளவில் பெற்றுக்கொள்வதுடன், பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் ஆட்சி பீடம் ஏறுவதே ஹிலரியின் நோக்கமாக அமைந்திருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், டொனால்ட் ட்ராம்ப் அதிக வாக்குகளைப் பெற்று;ககொண்டு வெற்றியீட்டியதாகவும் வெள்ளையின பெரும்பான்மை மக்கள் வாழ்ந்து வரும் அமெரிக்காவில் தேர்தல் முடிவுகள் ஹிலரிக்கு சாதகமாக அமையவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெள்ளையின ஆண்கள் அதிகளவில் ட்ராம்ப்பிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
1 comment
திருமதி. ஹிலரி கிளின்ரனின் தேர்தல் தோல்வி குறித்து, அரசியல் ஆய்வாளரும் முன்னாள் ராஜதந்திரியுமான திரு. தயான் ஜயதிலக்க தெரிவித்த கருத்து எந்த வகையிலும் ஏற்புடையதல்ல! ‘ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழியைப் பின்பற்றியமையினால்தான் திருமதி. கிளிங்ரன் தோல்வியடைந்தார்’, என்பதாக அமைந்துள்ள அவரது கருத்து, சிறுபிள்ளைத்தனமானது!
சில சம்பவங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கும் சில அடிப்படைத் தகைமைகள் இருக்க வேண்டும்! 65.000 சதுரக் கிலோமீட்டர் பரப்பளவையும், 2012 ம் ஆண்டுக்கு குடிசன மதிப்பீட்டுப் பிரகாரம், வெறும் 2 கோடி மக்கள் தொகையையும்(75 % பெரும்பான்மையினர்),கொண்ட ஒரு சிறிய நாடான இலங்கையுடன், 10 கோடி சதுரக்கிலோ மீட்டர்கள் பரப்பளவையும், 2010 ம் ஆண்டுக்கு குடிசன மதிப்பீட்டுப்பிரகாரம்,30 கோடி மக்கள் தொகையையும்(72% பெரும்பான்மையினர்) கொண்ட ஐக்கிய அமெரிக்காவுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் அளவுக்குத் திரு. தயான் ஜயதிலக்கவின் அறிவு மழுங்கிப் போய்விட்டதா?
உலகின் அதி செல்வந்த நாடான, விஞ்ஞான வளர்ச்சியில் உச்சந்தொட்ட அமெரிக்காவுடன், ஒரு குண்டூசிக்கே இறக்குமதியை நம்பியிருக்கும் இலங்கையை எப்படி ஒப்பிட முடியும்? இலங்கை மற்றும் அமெரிக்கத் தேர்தல்களிடையே சில ஒற்றுமைகள் இருந்திருக்கலாம், மறுக்க முடியாது! அதற்காக, ‘இவர்களைப் பார்த்து அவர்கள் சூடு போட்டுக் கொண்டார்கள்’, என்பது எவ்வளவு அறிவீனமானது!
எல்லாம் சரிதான், இவர் கருத்துப்படி திருமதி. ஹிலரி கிளிங்ரன் வெற்றி பெற்றிருக்க வேண்டுமே? அப்போ? என்ன தவறு, எங்கே நடந்தது? அதையும் சொல்லியிருக்கலாமே? வெள்ளையின ஆண்கள் முட்டாள்கள் என்று சொல்ல வருகின்றாரா? மக்கள் தீர்ப்பை மகேசன் தீர்ப்பாக ஏற்று, ஆளாளுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் மனிதாபிமானம் இருக்கும் அமெரிக்காவுடன், தோல்வியுற்றபின் சதி மூலம் ஆட்சியை கைப்பற்ற எண்ணும் காட்டுமிராண்டித்தனம் நிலவும் இலங்கையை ஒப்பிடும் மனநிலை திரு. தயான் ஜயதிலக்கவுக்கு எங்கிருந்து வந்ததோ?