தமிழர் உரிமையின் பெருங்குரல், சட்டத்தரணியும் யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான நடராஜா ரவிராஜ் (ஜூன் 25, 1962 – நவம்பர் 10, 2006) படுகொலை செய்யப்பட்டு பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன.
யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட ரவிராஜ் சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரி மற்றும் யாழ் பரி யோவான் கல்லூரிகளில் கல்வி கற்றார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் 1987 ஆம் ஆண்டு இலங்கையின் உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக பதிவு செய்தார்.
ரவிராஜ் சட்டத்தரணியாக இருந்து அரசியலில் நுழைந்தார். 1984 முதல் 1990 வரையிலும் 1993 முதல் 1997 வரையிலும் மனித உரிமைகள் இல்லத்தை நடத்தினார். 1987 இல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியில் இணைந்தார். 1990 ஆம் ஆண்டு அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினரானார்.
1997 ஆம் ஆண்டு யாழ். மாநகரசபை பிரதி முதல்வராகவும், 1998 இல் யாழ். மாநகரசபை முதல்வராகவும் தெரிவானார். 2001 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தென்மராட்சி பகுதியில் போட்டியிட்டு இருமுறையும் வெற்றி பெற்றார்.
2006 நவம்பர் 10 வெள்ளிக்கிழமை அன்று காலை 7:00 மணிக்கு ரவிராஜ் தெரன தொலைக்காட்சியில் நடந்த ஒரு நேரடி நேர்காணல் ஒன்றில் பங்குபற்றிவிட்டு வீடு திரும்பி பின்னர் மீண்டும் வீட்டை விட்டு தனது வாகனத்தில் வெளியேறிய போது காலை 8:45 மணியளவில் கொழும்பு நாரகேன்பிட்டிய மனிங்டவுனில் உள்ள அவரது வீட்டுக்கருகில் விசையுந்து ஒன்றில் வந்த இரண்டு இனந்தெரியாதோரால் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அதியுயர் தேசிய விருதான மாமனிதர் விருது, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் இவருக்கு வழங்கப்பட்டது. நடராஜா ரவிராஜ் கொலை குறித்த வழக்கு விசாரணை ஆட்சி மாற்றத்தின் பின்னர் முன்னெடுக்கப்படுகிறது.