தமிழக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் எனவும் நீதித்துறைக்கு போதிய அளவில் நிதியை ஒதுக்க வேண்டும் எனவும் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக அரசின் நிதிச்செயல்பாடுகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கடுமையான வினாக்களை எழுப்பியிருக்கிறது. இந்த வினாக்கள் அனைத்தும் மிகவும் நியாயமானவை எனவும் தமிழகத்தின் நிதிநிலைமை உயிரோட்டத்துடன் இருக்கிறதா என்பதை அறிவதற்காக நாடித்துடிப்பை சோதித்துப் பார்க்கும் நோக்கம் கொண்டவை எனவும் அவர் தெரிவிதத்துள்ளார்.
நடப்பாண்டில் தமிழக அரசின் ஒட்டுமொத்த வரி வருமானம் 86 ஆயிரத்து 537 கோடி தான் எனும் போது, அதில் பாதியளவுக்கு கடன் வாங்க வேண்டியிருந்தால் தமிழகத்தின் நிதி நிலைமை எந்த அளவுக்கு மோசமாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகம் திவாலான மாநிலம் என்று அரசு அறிவிக்கப்போகிறதா என சென்னை உயர்நீதிமன்றம் வினா எழுப்பியுள்ள நிலையில், அதற்கு விளக்க மளிக்கும் வகையில் தமிழக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும்; எனவும் நீதித்துறைக்கு போதிய அளவில் நிதியை ஒதுக்க வேண்டும் எனவும் அன்புமணி தெரிவித்துள்ளார்.