குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு
நாட்டு மக்களுக்கு ஆற்றி வரும் சேவை குறித்து திருப்தி அடைவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 19ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதாகவும் சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் மனித உரிமைகள், ஜனநாயக உரிமைகள், அடிப்படை உரிமைகளை உறுதி செய்துள்ளதுடன், ஊடக சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தம்மை ஜனாதிபதியாக நியமித்த போது மக்கள் உணவும் குடிநீரையும் கோரவில்லை எனவும் சுதந்திரமாக வாழும் சூழ்நிலையை உருவாக்குமாறு கோரியதாகவும் தெரிவித்துள்ள அவர் நல்லிணக்கத்தை ஒன்றிரண்டு நாட்களில் ஏற்ப்படுத்திவிட முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் சிறுபான்மை இனத்தவர் ஒருவரே பிரதம நீதியரசராக கடமையாற்றி வருவதாகவும் நீதிமன்றின் சுயாதீனத்தன்மையை உறுதி செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் வடக்கு மக்கள் ஐக்கிய இலங்கை என்ற சொல்லுக்கு அஞ்சுவதாகவும், தெற்கு மக்கள் சமஸ்டி என்ற சொல்லுக்கு அஞ்சுவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த வார்த்தைகளைக் கொண்டு போராடாது, அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒர் பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.