ஜப்பானுக்கு இந்தியாவுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ பயணமாக டோக்கியோ சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டு மன்னர் அகிஹிட்டோவை இன்று சந்தித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை மோடி சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
பொதுவாக அணுஆயுத தடை பரவல் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகளுடன் ஜப்பான் அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொள்வது இல்லை என்ற போதிலும் இருநாட்டு நட்பை கருத்திற் கொண்டு முதல்முறையாக குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத இந்தியாவுடன் ஜப்பான் அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் அணுசக்தி மூலப்பொருட்கள், தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு ஜப்பான் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் எதிர்வரும் 2032-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் அணு மின் உற்பத்தியை 10 மடங்காக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதுடன் ஜப்பானுடனான அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவின் தேவையை பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நீரிலும் நிலத்திலும் தரையிறங்கும் மீட்பு விமானத்தை இந்திய கடற்படைக்கு வழங்க ஜப்பான் ஒப்புக் கொண்டுள்ளது. மோடியின் பயண நிறைவில் அணுசக்தி ஒப்பந்தம் தவிர மேலும் 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது