மத்திய சுகாதார அமைச்சினால் நாடளாவிய ரீதியில் இம்முறை 380 மருந்துக் கலவையாளர்கள் நியமிக்கப்பட்ட போதும் கிழக்கு மாகாணத்துக்கு 2 பேர் மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளமை மிகவும் கண்டிக்கத்தக்கது என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு சுற்றறிக்கையின் பிரகாரம் கிழக்கு மாகாணத்தில் 56 மருந்துக் கலவையாளர்களுக்கான வெற்றிடம் இருக்கையில் 2 பேரை மாத்திரமே நியமித்திருப்பது தமது மாகாணத்திற்கான புறக்கணிப்பு தொடர்வதாகவே கருத வேண்டியுள்ளது என்பதை தெரிவிக்க வேண்டிய தேவையுள்ளது என அவர் தெரிவித்துள்ளார் .
இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் பி.ஜி மஹிபால மற்றும் சுகாதர அமைச்சின் செயலாளர் அனுர ஜயவிக்ரம ஆகியோரரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கடும் கண்டனத்தையும் அதிருப்தியையும் வெளியிட்டதுடன் இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் மாகாணத்துக்கான தேவைகள் அனைத்தையும் போராட்டங்களின் மூலமே பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளமை வேதனையளிப்பதுடன் கிழக்கு மக்களின் உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கு எவ்வாறான போராட்டங்களையும் சந்திக்க தயார் எனவும் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.