வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட யாழ்ப்பாணம் மாவட்டத்தில் செயற்பட்டு வருகின்ற ஒரேயொரு மாநகர சபையான யாழ்ப்பாணம் மாநகர சபையின் சுகாதார மற்றும் வேலைப் பகுதிகளில் தற்காலிமாக பணியாற்றி வருகின்ற சுமார் 197 தொழிலாளர்கள் தங்களுக்கான நிரந்தர நியமனம் கோரி கடந்த 07ம் திகதி முதல் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுடன் இணைந்து ஏனைய நிரந்தரப் பணியாளர்களும் இப் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவதன் காரணமாக, யாழ் மாநகரம் குப்பைகளால் நிரம்பி வழிகின்ற நிலையில், பல்வேறு சுகாதார சீர்கேடுகளுக்கும் அது வழி வகுத்துள்ளதுடன, மாநகர சபையின் அனைத்து உட்கட்டுமாண செயற்பாடுகளும் முடக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், யாழ்ப்பாணம் நகரத்தின் தற்போதைய தேவைகளை அவதானத்தில் கொண்டு, யாழ்ப்பாணம் மாநகர சபையில் தற்போது தற்காலிக பணியாளர்களாக பணி புரிந்து வருகின்ற சுமார் 197 பணியாளர்களை நிரந்தரப் பணியில் அமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவிடமும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கான அமைச்சர் பைசர் முஸ்தபாவிடமும் வலியுறுத்தியுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடககுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் யுத்தச் சூழ்நிலை முடிவுக்கு வந்ததன் பின்னரான காலகட்டங்களில் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பெரும்பாலான மக்கள் குடியேறியுள்ளதாலும், வடக்கு உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெருந்தொகையான மக்கள் யாழ் நகரப் பகுதியை நோக்கி தினமும் வருகை தருவதாலும், யாழ்ப்பாண நகரத்தின் சுற்றாடல் மற்றும் ஏனைய அடிப்படைத் தேவைகள் தொடர்பில் போதியளவு பணியாளர்களை பணியில் அமர்த்த வேண்டிய நிலையில், 2009ம் வருட இறுதிப் பகுதியிலிருந்து 2011ம் வருடம் வரையிலான காலப் பகுதியில் படிப்படியாக தற்காலிக அடிப்படையில் பணியில் இணைத்துக் கொள்ளப்பட்ட சுமார் 197 பணியாளர்களுக்கு இதுவரையில் நிரந்தர நியமனங்கள் வழங்கப்படவில்லை எனத் தெரிய வருகிறது எனவும் இவர்களில் சுமார் 127 பேர் சுகாதாரத் பகுதிக்கெனவும், சுமார் 70 பேர் வேலைப் பகுதிக்கெனவும் இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள் எனத் தெரிய வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், யாழ்ப்பாணம் மாநகர சபையில் சுகாதாரப் பகுதிக்கென 382 அனுமதிக்கப்பட்ட ஆளணிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இப் பகுதியில் தற்போது 380 பணியாளர்கள் நிரந்தர நியமனம் பெற்றிருப்பதாகவும், வேலைப் பகுதிக்கென 170 அனுமதிக்கப்பட்ட ஆளணிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இப் பகுதியில் தற்போது 170 பணியாளர்கள் நிரந்தர நியமனங்களைப் பெற்றிருக்கின்றனர்.
எனவே, மேற்படி தொழிலாளர்களின் வாழ்வாதரங்களைக் கருத்தில் கொண்டு, இவர்களுக்கு நம்பிக்கையானதொரு எதிர்கால வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் நோக்கிலும், தற்போது யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள சுகாதாரா சீர்கேடுகளைத் தவிர்க்கும் வகையிலும், முடங்கிப் போயுள்ள மாநர சபையின் ஏனைய செயற்பாடுகளை மீள ஆரம்பிக்கும் வகையிலும் உரிய, நியாயமான தீர்வாகவும், யாழ்ப்பாணம் நகரத்தின் தற்போதைய தேவைகளை அவதானத்தில் கொண்டும், யாழ்ப்பாணம் மாநகர சபையில் தற்போது தற்காலிக பணியாளர்களாக பணி புரிந்து வருகின்ற சுமார் 197 பணியாளர்களை நிரந்தரப் பணியில் அமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தியுள்ளதுடன், இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தின் நாளைய தின அமர்வின் போது கேள்வி எழுப்பவுள்ளதாகவும் ஊடகக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.