மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தானின் ஏற்பாட்டில் நேற்று கடற்றொழில்துறை அமைச்சில் அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன், முசலி பிரதேச மீனவர் சங்கங்களின் சமாசம் நடத்திய பேச்சுவார்த்தைகளின் பின்னர் இந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக முசலி பிரதேச கடற்பரப்பில் வெளி மாவட்ட மீனவர்கள் தங்கி நின்று மீன்பிடியில் ஈடுபடுவதாகவும், தடை செய்யப்பட மீன்பிடி முறைகளை கையாள்வதால் குறித்த பிரதேச மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுகின்றது.
அத்துடன் குறித்த பகுதிக்கு வருகை தந்துள்ள வெளி மாவட்ட மீனவர்கள் தற்பொழுது அங்கு நிரந்தரமாக வாசிப்பதற்காக பதிவுகளை மேற்கொள்வதாகவும், வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளை செய்து வருவதாகவும் முசலி பிரதேச மீனவர் சங்கங்களின் சமாசம் குற்றஞ்சாட்டியுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் அப்பகுதி மீனவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளை கேட்டறிந்துகொண்டதுடன் , விடயயம் தொடர்பில் சாதகமான தீர்வொன்றை எதிர்வரும் புதன் கிழமை இடம்பெறும் சந்திப்பில் தான் வழங்குவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் அழைப்பின் பேரில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பிரதியமைச்சர் அமீர் அலி, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான {ஹனைஸ் பாருக், மற்றும் முசலி பிரதேச மீனவர் சங்கங்களின் சமாச உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது