இன்று (13) முற்பகல் ஜனாதிபதி தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பமான தேசிய நீரிழிவு தின நடைபவனி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகத்தில் முடிவடைந்தது. அங்கு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோது அனைவருக்கும் முன்மாதிரியான இந்த நிகழ்ச்சியை பாராட்டிய ஜனாதிபதி, ஆரோக்கியமான தேசத்தை உருவாக்குவதற்கு அனைவரினதும் அர்ப்பணிப்பும் அக்கறையும் மிகவும் முக்கியமானதென்பதை சுட்டிக்காட்டினார்.
தேசிய நீரிழிவு தினத்தோடு இணைந்ததாக நடைபெற்ற அகில இலங்கை சித்திரப் போட்டியில் வெற்றிபெற்றோரின் சித்திரங்கள் அடங்கிய கண்காட்சியும் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது. நவம்பர் மாதம் 14ஆம் திகதியில் வரும் தேசிய நீரிழிவு தினத்தோடு இணைந்ததாக சுகாதார அமைச்சின் தொற்றாநோய் அலகு மற்றும் சிறுநீரக நிபுணர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நடைபவனி ஏற்பாடு செய்யப்பட்டது.