குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள வங்கியில் வரிசையில் நின்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் பழைய 1000, 500 ரூபாய் தாள்களை கொடுத்து புதிய நாணயத் தாள்களை வாங்கிச் சென்ற காட்சியை இந்திய ஊடகங்கள் பலவும் வெளியிட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ம் தேதி இரவு, 500, 1000 ரூபாய் தாள்கள் செயலிழப்பதாக அறிவித்தார். மேலும், இந்த தாள்களை டிசம்பர் 30-ம் தேதி வரை வங்கிகளில் பொதுமக்கள் மாற்றிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் வங்கிகளுக்கு படையெடுத்த வண்ணம் இருக்கின்றனர்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் தன்னிடம் உள்ள பழைய 1000 மற்றும் 500 ரூபாய் தாள்களை வரிசையில் நின்று மாற்றினார். குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள வங்கிக்கு இன்று காலை சென்ற ஹீராபென் பணத்தை மாற்றுவதற்காக மக்களுடன் சேர்ந்து வரிசையில் நின்றுக் கொண்டிருந்தார். பின்னர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தன்னிடம் இருந்த பழைய 1000 மற்றும் 500 ரூபாயாக மொத்தம் ரூ.4500 ரூபாய்களை அவர் மாற்றினார். இதில், 2000 ரூபாய் தாள் ஒன்றும் வழங்கப்பட்டது.