170
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி
தமிழ் மக்கள் வெறும் அரசியல் மையப்பட்ட வாக்காளர்களாக இருக்கின்றாா்கள் – வடக்கில் ஆளும்கட்சிக்குள் எதிர் கட்சி சாதித்தது எதுவுமில்லை எனவும் குற்றச்சாட்டு – மன்னார் வெகுஜன அமைப்புகளின் தலைவர் சிவகரன் –
தமிழ் மக்கள் இப்பொழுது வெறும் வாக்காளர்களாக இருக்கின்றார்கள். தமிழ் மக்கள் வெறும் வாக்காளர்களாக இருக்கும் வரை இந்த நிலைமை தொடரும். தமிழ் மக்கள் விடுதலையாளர்களாக மாறவில்லை இந்த நிலையால் தான் வெறுமனே வாக்களித்துவிட்டு வீட்டுக்குச் சென்றுவிடுகிறோம் என தமிழரசு கட்சியின் முன்னாள் இளைஞர் அணி தலைவரும், மன்னாள் வெகுஜன அமைப்புக்களின் தலைவருமான சிவகரன் தெரித்துள்ளார்.
கிளிநொச்சி கூட்டுறவாளா மண்டபத்தில் நடைபெற்ற அரசியல் கைதி விவேகானதனூர் சதீசின் விடியலைத் தேடும் இரவுகள், மற்றும் இரும்புக் கதவுக்குள்ளிருந்த எனும் இரண்டு நூல் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவரின் முழுமையான உரை வருமாறு
இன்றைய இந்த விழாவுக்கு வருகை தந்துள்ள தமிழ் முறையிலே பிரதம விருந்தினர்களுக்கும், சமஸ்கிருத முறையிலே பிரதம விருந்தினர்களுக்கும் அவ்வாறே தமிழ் முறையிலே சிறப்பு விருந்தினர்களுக்கும், சமஸ்கிருத முறையிலே சிறப்பு விருந்தினர்களுக்கும், மற்றும் வருகையாளர்களுக்கும் இனிய மாலை வணக்கங்கள்.
அடிமைகளின் கல்லறைகளை விட தோற்றுப் போனவர்களின் கல்லறைகளுக்கு வரலாறு அதிகம். இது கார்த்திகை மாதம் விடுதலை என்கின்ற நோக்கோடு தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்த அந்த வீர மறவர்களின் நாட்களை நெருங்குகின்ற காலக்கட்டத்தில், இந்த விடுதலை எனும் நோக்கை இறுதிவரை காவியங்களை நிகழ்த்திய இந்தக் காலத்தில் இவ்வாறன நிகழ்வு நெகிழ்ச்சியானதொன்று.
என்ன செய்வது சத்தியத்திற்கு ஒரு போதும் சரிவு வருவதில்லை, சற்று தளர்ச்சிதான் ஏற்படும் ஆனால் அந்த சரிவுகளையும் சந்தித்துதான ஆகவேண்டிய நிலையில் இந்த இனம் இருக்கிறது.நான் இலக்கியத்தில் அரசியல் பேசுவதில்லை ஆனால் இதுவொரு அரசியல் சார்ந்த நோக்கோடு அவர் சிறையில் இருந்து எழுதிய நூல் என்றபடியினால் அரசியல் பேசுவதற்கு உரிமையுண்டு.
எனக்கு கிடைத்த தகவல்களின் பிரகாரம் இன்று சிறைகளில் 153 பேர் இருப்பதாக கேள்வி. அது பற்றி சரியான தகவல் எவரிடமும் இல்லை.விடுதலைக்காக போராடுகின்ற போராட்ட அமைப்புகளிடமும் பெற்றுக்கொள்ள முடியவில்லை, விடுதலையை பெற்றுக்கொடுகின்றோம் என்று சொல்லும் அரசியல் கட்சிகளிடம் பெற்றுக்கொள்ள முடியவில்லை. நான் பல முறை முயற்சித்தேன் சரியாக கிடைக்கவில்லை இருப்பினும் எனக்கு தெரிந்த தகவலை தருகிறேன்.
மகசீன் சிறைசாலையிலே 90 கைதிகள் இருக்கின்றார்கள் அதில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் 52 பேர், தண்டணை வழங்கப்பட்டவர்கள் 24 பேர்,மேன்முறையீட்டு வழக்கு நடக்கின்றவர்கள் ஏழு பேர், ஆயுள் தண்டயை பெற்றவர்கள் இருவர். வெலிக்கடையில் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார், ரிஆர்ரி தடுப்பு முகாமிலே மூவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள், நீர்கொழும்பிலேயே மூவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளளர். இருவருக்கு தண்டணை வழங்கப்பட்டுள்ளது.
அநுராதபுரத்திலே 19 பேர் தடுத்து வைக்கப்பட்டுளளார்கள் இருவருக்கு தண்டணை வழங்கப்பட்டுள்ளது, மாவாகலையிலே இருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், இருவர் ஆயுள் தண்டணை கைதியாக உள்ளளனர், மட்டகளப்பிலே ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார், இன்னொருவர் தண்டணை கைதியாக உள்ளார், யாழ்ப்பாணத்திலே ஆறு தண்டணை கைதிகள் இருக்கின்றனர், கண்டியிலே ஒன்பது பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் நான்கு தண்டணை கைதிகள் இருக்கின்றார்கள் ஒரு மேன்முறையீட்டாளர் இருக்கின்றார். வெலிக்டையிலே பெண்கள் பிரிவில் ஆறு பெண்கள் இருக்கின்றார்கள். இது எனக்கு கிடைத்த தகவல் இது எவ்வளவு தூரம் சரி என்று எனக்கு தெரியவில்லை.
எங்களிடம் தகவல்கள் சேகரிப்பது மிகவும் குறைவாகதான் இருக்கிறது. தகவல்கள் இல்லை வெறுமனே கோசங்கள் அப்பால் இலட்சியம் இல்லாத போராட்டம்,அல்லது கோசங்களுக்கு அப்பால் உண்மைகளை கண்டுப்பிடிக்க முடியாத நிலைப்பாடு, இவற்றில்தான் வெறும் வெற்றுக்கோசங்களுகாக நாம் சென்றுகொண்டிருக்கின்ற சூழல் இருக்கிறது. இந்த அரசியல் கைதிகளின் நிலைப்பாடு பற்றி ஒரு சரியான தளத்திலே எவ்வாறன் முன்னெடுப்புக்கள் இந்த ஏழு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று ஒரு கேள்வியை கேட்டால் அங்கு ஒரு பதில் கிடைக்க கூடிய சூழ்நிலை இல்லை. ஏனெனில் அவர்கள் இந்த நாட்டுக்கான விடுதலைக்காக சென்றவர்கள் சிறைகம்பிக்குள்ளே மாட்டிக்கொண்டவர்கள். அவர்களுக்கு நாங்கள் இந்த தமிழ்த்தேசியம் பேசும் நிலையிலே இருந்துகொண்டு செய்தது என்ன? நாங்கள் செய்தது என்ன? செய்ய விரும்பியது என்ன?, செய்வதற்காக வகுத்தது என்ன? இல்லை பதில் இல்லை.
வெறுமனே நான் ஏலவே சொன்னது போல் இலட்சியம் அற்ற கோசங்கள். வடக்கு கிழக்கு பிரதேசங்களில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் நிலைப்பாடு என்ன? ஒவ்வொரு குடும்பங்களின் நிலைப்பாடு என்ன? என எவ்வாறான தகவல்களை நாங்கள் சேகரித்து வைத்திருக்கின்றோம். எத்தனை கணவரை இழந்தவா்கள் இருக்கின்றார்கள்? எத்தனை அநாதைகள் இருக்கின்றார்கள்? எத்தனை அங்கவீனர்கள் இருக்கின்றார்கள்? எத்தனை பேர் காணாமல் போயுள்ளார்கள்? எத்தனை பேர் காணாமல் போகச் செய்யப்பட்டார்கள்? ஜநாவின் தகவலின் படி ஒரு இலட்சத்து 46 ஆயிரத்து 608 பேர் காணாமல் போனார்களா? படுகொலை செய்யப்பட்டார்களா? என்ற ஒரு வாதம் உண்டு.
ஆனால் எங்களால் இந்த ஏழு ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஆய்வு என்ன, முடிவு என்ன,? ஒன்றுமில்லை பூச்சியம். இந்த பூச்சியத்தில் இருந்துகொண்டுதான் சதீஸ் போன்றவர்களின் புத்தக வெளியீடுகளை நடத்த வேண்டியவர்களாக இருக்கின்றோம். மகிந்தவின் 18 சுற்றுப் பேச்சிலே 16 ஆவது பேச்சுவார்த்தை அரங்கிலே சொல்லப்பட்டது அடுத்த மாதம் வாருங்கள் நாங்கள் இந்த இந்த இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்களை தருகின்றோம் என்றார்கள் இதுவரை அவர்களும் தரவில்லை எம்மவர்களும் நிர்பந்திக்க வில்லை.
தமிழ் மக்கள் இப்பொழுது வெறும் வாக்காளர்களாக இருக்கின்றார்கள். யாரும் குறை நினைத்தாலும் பரவாயில்லை. இவ்வாறு தமிழ் மக்கள் வெறும் வாக்காளர்களாக இருக்கும் வரை இந்த நிலைமை தொடரும். தமிழ் மக்கள் விடுதலையாளர்களாக மாறவில்லை இந்த நிலையால் தான் வெறுமனே வாக்களித்துவிட்டு வீட்டுக்குச் சென்றுவிடுகிறோம். விடுதலை என்ற ஒன்றை மட்டும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் தமிழ் மக்கள் மக்கள் மையப்படுத்தப்பட்ட போக்குக்குள் வரவில்லை அவர்கள் வெறும் அரசியல் மையப்படுத்தப்பட்ட போக்குக்குள் இருக்கின்றார்கள். வடக்கு கிழக்கு தமிழ்த் தலைமைகளும் அரசியல் மையப்படுத்தப்பட்டு இருக்கிறது. அரசியல் மையப்படுத்தப்பட்டு இருகின்ற தமிழர்களை விரும்புகிறது. இரண்டு புள்ளிகளும் ஒன்றையொன்று சந்திக்கிறது. ஆதாலால்தான் தமிழ் மக்கள் வெறுமனே அரசியல் மையப்படுத்தப்பட்ட வாக்காளர்களாக இருக்கின்றார்கள். இவர்கள் என்றைக்கு மக்கள் மையப்படுத்தப்பட்டு மாறுகின்றார்களோ அன்றைக்கு இவர்களுக்கு விடுதலை என்கின்ற தாகம் வரும்.
விடுதரைலப்புலிகள் பல்வேறு கட்டமைப்புக்களை அடிப்படையிலே வைத்திருந்தார்கள் அதனால் விடுதலையை நோக்கி மக்கள் ஒன்றிணைந்தார்கள் எல்லோரும் பின்னால் சென்றார்கள். அன்று மக்கள் மையப்படுத்தப்பட்ட விடுதலை இருந்தது நாங்கள் எல்லோரும் இந்த நிலைப்பாட்டை எடுத்தோம் ஆனால் இப்பொழுது அரசியல் மையப்படுத்தப்பட்ட நிலைமையே இருக்கிறது. இப்பொழுது மக்கள் எல்லோரும் வெறும் வாக்காளர்கள் வாக்களிக்கப்பதோடு எங்களின் பிரச்சினை முடிந்துவிட்டது. நாங்கள் சாதித்தது என்ன, மிக்பெரிய நீதியரசை கொண்டு வந்து வடக்கு மாகாண சபையில் வைத்தோம் .
அங்கிருப்பவர்கள் எல்லோரும் கல்வியலாளர்கள் ஆனால் நடந்தது என்ன? ஒன்றும் செய்யவில்லை ஆளுங்கட்சிக்குள் எதிர்கட்சி ஒற்றையாட்சிக்குள் சமஸ்டி என்பது போல் ஆளும் கட்சிக்குள் எதிர்கட்சி தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் சாதித்தது என்ன? சாதிப்பதற்காக செய்தது என்ன? (இச் சந்தர்ப்பத்தில் மாகாண சபை உறுப்பினர் ப.அரியரத்தினம் சபையில் இருந்து தான் செல்லப் போவதாக எழுகின்றார் ஏற்பாட்டாளர்கள் சமரசம் செய்து அமர வைக்கின்றனர்) இவ்வாறான நிலைப்பாடுகளால் தமிழ் மக்கள் மிக மோசமாக பாதிக்கப்படப் போகின்றார்கள் நான் யாரையும் தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்டவரவில்லை.
இன்றைய மாறுப்பட்ட சூழ்நிலையில் பூகோள,பிராந்திய அரசியல் நலன்களுகளின் அடிப்படையில் இந்த அரசியல் போக்கு நகரக் கூடிய வாய்ப்பு உண்டு. அதனால்தான் எங்களுடைய போராட்ட வடிவங்களும் படிமங்களும், நோக்கங்களும் இவ்வாறான நிலையில் இருக்கிறது. இதனை யாரும் மறுத்துவிடவோ மறந்துவிடவோ முடியாது. ஆகவே புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்பெறக் கூடிய சூழல் வகுப்படவேண்டும். அவ்வாறு இல்லை எனில் தமிழ் மக்களின் போக்கு எங்கே போய்விடுமோ என்று சொல்லத் தெரியவில்லை.
உண்மையை பேசுகின்ற போது சேக்ஸ்பியர் மகாத்மா காந்தியை நீ மிகப்பெரும் பயங்கரவாதி என்றார் ஏனய்யா என்னை பயங்கரவாதி என்கிறீர்கள் என்றுகேட்க சேக்ஸ்பியர் சொன்னராம் நீ உண்மையை பகிரங்கமாக பேசுகின்றாய் என்று. நாங்கள் எங்களுக்குள் பேசிக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது, உண்மைகளை அறிந்துகொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.ஆகவே இந்த நிலைப்பாடுகளில் இருந்துகொண்டு நாங்கள் தெளிந்துகொண்டு இவர்களுடைய விடுதலைக்காக அர்ப்பணிப்புடன் ஆக்கபூர்வமாக செயலாற்றி எல்லோரும் ஒத்துழைத்து அவர்களுடைய சுபீட்சமான எதிர்காலத்திற்கும், சந்தோசமான வாழ்க்கைக்கும் பொறுப்புள்ளவர்கள் பொறுப்போடும் விருப்போடும் செயற்படவேண்டும் என்று கேட்டு விடைப்பெறுகிறேன் என்றார் சிவகரன்.
Spread the love