குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் சந்தேக நபர்களுக்கு எட்டு மணி நேரம் குடிக்க நீரோ , உண்ண உணவோ , வழங்கப்படவில்லை என நீதிவானிடம் சந்தேக நபர்கள் முறையிட்டனர். புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதே எட்டாவது சந்தேக நபர் நீதிவானிடம் முறையிட்டார்.
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் ஒன்பதாவது சந்தேக நபரின் வங்கி கணக்குகளை விசாரணை செய்வதற்கு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் அனுமதி அளித்துள்ளார். புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.அதன் போது 12 சந்தேகநபர்களும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.
அதன் போது சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரனிகள் எவரும் முன்னிலை ஆகவில்லை. மாணவியின் உறவினர்கள் சார்பில் சட்டத்தரணி பா. ரஞ்சித்குமார் முன்னிலையானார். அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது , பொதுமக்களால் , பொலிசாரிடம் பிடித்துக் கொடுக்கப்பட்ட ஒன்பதாவது சந்தேக நபரான சுவிஸ் குமார் என்று அழைக்கபப்டும் மகாலிங்கம் சசிக்குமார் எவ்வாறு பொலிசாரிடம் இருந்து தப்பி கொழும்பு சென்றார் என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை தாம் முன்னெடுத்து வருவதாக குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவினர் நீதிவானிடம் தெரிவித்தனர்.
அத்துடன் தாம் மேலதிக விசாரனைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு எதுவாக ஒன்பதாவது சந்தேக நபரிடம் வாக்கு மூலம் பெற அனுமதிக்க வேண்டும் எனவும் , குறித்த சந்தேக நபர் தப்பி செல்வதற்கு பணப்பரிமாற்றம் ஏதேனும் நடைபெற்று உள்ளதா என்பது தொடர்பில் 16 வங்கிகளை விசாரணை மேற்கொள்வதற்காக அனுமதிக்க வேண்டும் எனவும் மன்றில் கோரி இருந்தனர்.
அதற்கு அனுமதி அளித்த நீதிவான் சந்தேக நபரின் வாக்கு மூலத்தினை நீதிமன்ற வளாகத்துனுள் வைத்து பதிவு செய்யுமாறும் , குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவினர் கோரிய 16 வங்கிகளிலும் விசாரணை நடாத்த அனுமதித்ததுடன் , அதில் இலங்கையில் உள்ள பிரபலமான தனியார் வங்கிகளின் பெயர்கள் இல்லை என்பதனையும் தாம் கவனத்தில் எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு கொலை மிரட்டல்
பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு கொலை மிரட்டல் விடுத்தமை தொடர்பில் சந்தேக நபர்களிடம் வாக்கு மூலம் பெறுவதற்கு நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என பொலிசார் நீதிவானிடம் கோரிக்கை விடுத்தனர். மாணவி கொலை வழக்கின் சந்தேக நபர்கள் கடந்த ஜனவரி மாதம் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு கொலை மிரட்டல் விடுத்து இருந்தனர்.
குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் தம்மை பழி தீர்க்கும் முகமாகவே மாணவி கொலை வழக்கில் தம்மை சிக்க வைத்து உள்ளார் எனவும் , தாம் இந்த கொலை வழக்கில் இருந்து வெளியே வந்ததும் தம்மை சிக்க வைத்த பொலிஸ் உத்தியோகஸ்தரை கொலை செய்வோம் எனவும் மிரட்டி இருந்தனர்.
அந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் ஒன்பது பேரிடம் இருந்து வாக்கு மூலத்தை பதிவு செய்ய அனுமதிக்குமாறு பொலிசார் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்றுக்கொண்ட நீதிவான் குறித்த ஒன்பது சந்தேகநபர்களிடமும் நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து வாக்கு மூலத்தை பெற்றுக் கொள்ளுமாறு நீதிவான் உத்தரவு இட்டார்.