நாணய செயலிழப்பு மற்றும் புதிய நாணத்தாள் அறிமுகம் குறித்த தன்னுடைய நடவடிக்கை கடுமையானது என்பதை ஒப்புக்கொள்வதாக கூறிய இந்தியப் பிரதமர் மோடி தான் தேனீர்விற்றபோது எல்லோரும் கடும் தேனீர்தான்( சாயம் கூடிய ஸ்ரோங் ரீ) கேட்பதாக தெரிவித்துள்ளார்.
பண்டித நேருவின் குடும்பமும், காங்கிரஸ் கட்சியும் தன்னைப் பழித்து வருவதாகவும் இருந்தாலும் அவரது காலத்தில் விட்டுச் சென்ற பணிகளை நிறைவேற்றுவதற்காக அவரது பிறந்தநாள் சமயத்தில் காஸிபூருக்கு வந்துள்ளதாகவும் மோடி தெரிவித்தார்.
ஏழை மக்களின் நாடித் துடிப்பை நான் உணர்கிறேன் என்று தெரிவித்த அவர் ஏழை களுக்கு சொந்தமான பணத்தை மற்றவர்கள் கொள்ளையடித்துச் செல்வதை இனியும் அனுமதிக்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்டார். என்னை எதிர்ப்பவர்கள் அனை வரும் மிகவும் வலுவானவர்கள் எனக் கூறிய மோடி அவர்களைக் கண்டு அஞ்சப்போவதில்லை என்றும் தொடர்ந்து உண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பாதையில் பயணிக்கப் போவதாகவும் அதில் இருந்து ஒருபோதும் விலக மாட்டேன் என்றும் கூறினார்.
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அப்போது ஒட்டுமொத்த நாடே 19 மாதங்கள் வரை சிறைவாசம் அனுபவித்ததாகவும் வெறும் பதவிக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் கூறிய அவர் ஆனால் நான் ஊழலுக்கு எதிராக போரிட 50 நாட்கள் மட்டுமே கேட்கிறேன் என்றும் தெரிவித்தார்