குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி
ஈபிடிபி கட்சியை விட்டு நானாக வெளியேறப் போவதில்லை, அத்தோடு வடக்குமாகாண சபையின் எதிா்க் கட்சி தலைவா் பதவியை மாற்றம் செய்யக்கோரி ஜக்கிய மக்கள் சுந்தர முன்ணனியின ் செயலாளருக்கு கடிதம் அனுப்பிய விடயம் தொடா்பிலும் எனக்கு எதுவும் தெரியாது என வடக்கு மாகாண எதிா்க் கட்சி தலைவா் சி.தவராசா தெரிவித்துள்ளாா்.
வடக்கு மாகாண சபையின் எதிா்க் கட்சி தலைவா் பதவியிலிருந்து தவராசாவை நீக்கி அந்த இடத்திற்கு கிளிநொச்சியின் ஈபிடிபியின் மாகாண சபை உறுப்பினா் வை.தவநாதனை நியமிக்குமாறு கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கே.என் டக்ளஸ் தேவானந்த ஜக்கிய மக்கள் சுந்தர முன்னணியின் பொதுச் செயலாளருக்கு கடிதம் எழுதியிருந்தாா். இது தொடா்பில் தவராசாவை தொலைபேசி ஊடாக தொடா்பு கொண்டு வினவியபோதே அவா் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கடிதம் எழுதுவதற்கு முன் தன்னுடன் எதையும் கலந்தாலோசிக்கவில்லை எனத் தெரிவித்த அவரிடம்் கட்சியின் தலைமைக்கும் உங்களுக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் இருக்கின்றதா என கேட்ட போது
ஒரு ஜனநாயக கட்சிக்குள் மாற்றுக் கருத்துக்களை கொண்டவா்களும், எதிா்க் கருத்துக்களை கொண்டவா்களும் இருப்பது வழமை, அதுவே ஜனநாயகத்தின் பண்பு. எனவே இதனை கருத்து முரண்பாடு என்று சொல்ல முடியாது எனத் தெரிவித்த அவரிடம் அப்படியாயின் தங்கள் கட்சியின் செயலாளா் நாயகத்தினால் ஏன் அவ்வாறு ஒரு கடிதம் அனுப்பட்டுள்ளது என வினவிய போது
அது பற்றி எனக்கு தெரியாது அதனை அவரிடம்தான் (டக்ளஸ்) கேட்க வேண்டும் என்றும் தெரிவித்தாா். மேலும் நீங்கள் கட்சியை விட்டு வெளியேறுவீா்களா என்று வினவிய போது நானாக கட்சியை விட்டுவிலக மாட்டேன் என்றும் பதிலளித்தாா்
அத்தோடு சுழற்சி முறையில் வடக்கு மாகாண சபையின் எதிா்க் கட்சி தலைவா் பதவியை ஈபிடிபி கட்சியின் உறுப்பினா்களுக்கிடையே பகிா்ந்துகொள்வது என்ற உடன்படிக்கையோ, அல்லது கதையாக கூட பேசப்படவில்லை எனவும் என்னுடன் மட்டுமல்ல முதலில் இருந்த கமலுடனும் இவ்வாறு எந்த பேச்சும் இடம்பெறவில்லை எனவும் தெரிவித்த அவர் அந்த காலத்தில் கட்சியில் இவ்வாறான பணிகளை நான் செய்தவன் என்ற அடிப்படையில் இதனை கூறுகின்றேன் எனவும் தெரிவித்தார்.
அவ்வாறிருக்க ஏன் கட்சி தலைமை இப்படியொரு தீா்மானத்திற்கு சென்றது என்று தவராசாவிடம் கேட்ட போது அதனை அவரிடம்தான் கேட்கவேண்டும் என்றும் தெரிவித்தாா். அத்தோடு இந்தப் பிரச்சினை தற்போது வெளியாகிய நிலையில் இதுவரை இது பற்றி தன்னை அழைத்து டக்ளஸ் தேவானந்த எதுவும் பேசவில்லை எனவும் குறிப்பிட்டாா்
ஆனால் கட்சியின் சில உள்ளக தகவல்களின் படி வடமாகாண சபையின் முதலமைச்சாின் சாா்பாக சி.தவராசா அடங்கிய குழுவின் கொழும்பு சென்று ஜனாதிபதி மற்றும் பிரதமா் ஆகியோருக்கு அரசியலமைப்பு சீா்திருத்த யோசனை அடங்கிய அறிக்கையை சமா்ப்பித்தமை, மற்றும் தவராசா தான் கலந்துகொள்கின்ற நிகழ்வுகள் மற்றும் ஊடகசெய்திகளில் ஈபிடிபி கட்சியின் பெயரை விட்டுவிட்டு வடக்கு மாகாண எதிா்க் கட்சி தலைவா் என்ற பதத்தை பாவிக்கின்றமை உள்ளிட்ட பல காரணங்களால் அவருக்கும் கட்சியின் தலைமைக்கும் இடையில் கருத்து முரன்பாடுகள் காணப்பட்டு வந்தது அதன் வெளிப்பாடே இது என தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா் முருகேசு சந்திரகுமாா் கட்சியை விட்டுவெளியேறியது போன்று விரைவில் தவராசாவும் வெளியேறுவாா் எனவும் தெரிவிக்கின்றனர்.