சமயங்களுக்குள் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரங்களை மேற்கொண்டதாக தெரிவித்து கைதுசெய்யப்பட்ட, தௌஹீத் ஜமாத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்றைய தினம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அப்துல் ராசிக் பௌத்த மதம் மற்றும் ஞானசார தேரரை அவமதிக்கும் வகையிலான பிரச்சாரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டிருந்ததாகவும், இதன்மூலம் சமயங்களுக்கு இடையில் அசாதாரண சூழ்நிலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் காவல்துறையினர் நீதிமன்றில் அறிவித்ததனைத் தொடர்ந்து நீதவான் சந்தேகநபரை எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக அப்துல் ராசிக்கின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு வெளியிட்ட இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அதனைக் கண்டிக்கும் வகையில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர் கொழும்பு மகசின் சிறைச்சாலை முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.