ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினுள் ஊடுருவி அதிலுள்ள தரவுகளை மாற்றிய சம்பவம் காரணமாக சட்ட நடவடிக்கைகளுக்கு முகம் கொடுத்ததன் காரணமாக கல்வி வாய்ப்பு சீர்குலைந்த மாணவனை இன்று ஜனாதிபதி அலுவலகத்திற்கு வரவழைத்து அம்மாணவனது விபரங்களைக் கேட்டறிந்துள்ளார்.
தானே உதிரிப்பாகங்களைக் கொண்டு உருவாக்கிய கணனியையே தான் பயன்படுத்துவதாக அம்மாணவன்; தெரிவித்ததுடன் தனது குடும்பத்தவர் முகம்கொடுக்கும் வீட்டுப் பிரச்சினைகளையும் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
பெற்றோரின் பாதுகாப்பின் கீழ் மூன்று ஆண்டுகளுக்கு இந்த நன்நடத்தைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதுடன் அந்த சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்தி மாணவனின் எதிர்கால கல்வி நடவடிக்கைகள் வெற்றி பெறுவதற்கு தேவையான பின்னணி தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் சிறுவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை தவிர்த்து, சிறுவர் உலகைப் பாதுகாப்பது வளர்ந்தோர் அனைவரினதும் பொறுப்பாகும் என்பதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சிறுவர்களின் நலனுக்காகவும் பாதுகாப்புக்காகவும் தேசிய கொள்கையொன்றை விரைவாக அறிமுகப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
‘சிறுவர்களை பாதுகாப்போம்’ தேசிய செயற்திட்டம் (2016-2017) தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் இன்று (17) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சிறுவர்களின் நலன்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய ஜனாதிபதி அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் விசேட ஜனாதிபதி செயலணி ஒன்று இதற்காக நிறுவப்பட்டுள்ளதெனவும் சிறுவர்கள் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பிலும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டதுடன் அந்த நீதிமன்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கும் அச்செயற்பாடுகளின்போது சிறுவர்களுக்கு மனப்பாதிப்பு ஏற்படாதவாறு செயற்படுவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.