குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புதிய அரசியல் கட்சிக்கு சிறந்த எதிர்காலம் உண்டு என முன்னளர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தலைமையில் அண்மையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி என்ற கட்சி ஆரம்பிக்கப்பட்டது. அந்தக் கட்சியில் பசில் ராஜபக்ஸ உறுப்புரிமை பெற்றுக்கொண்டுள்ளார்.
இந்த புதிய கட்சியில் பல ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் இணைந்து கொள்வார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, கட்சியின் தலைவராக பதவி ஏற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய கட்சியினூடாக மஹிந்தவின் கனவுகள் நிறைவேறும் – பசில்
தமது புதிய கட்சியினூடாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் கனவுகள் நிறைவேறும் என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுசன முன்னணி கட்சியின் முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுசன முன்னணி கட்சியின் தலைமைக்கு மஹிந்த ராஜபக்ஸதான் தகுதியானவர் எனவும் அவரை எப்படியேனும் அந்தப் பொறுப்பில் கொண்டுவந்து சேர்த்துக் கொள்வேம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய கட்சியின் அனைத்து பதவி வெற்றிடங்களும் நாளடைவில் நியமிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள பசில் ராஜபக்ஸ பிரதான கட்சிகள் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளில் இருந்தும் பலர் தமது புதிய கட்சியுடன் இணைந்து கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.