குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையைச் சேர்ந்த நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 32 பேர் சிரியாவிற்கு சென்று ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் இணைந்து கொண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக நீதியமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ஸ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் இடம்பெறுகின்ற வரவு செலவு திட்டம் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ள நீதியமைச்சர் இன்று முதல் இனவாத அடிப்படைவாத செயற்பாடுகளுக்கு நாட்டில் இடமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
சில இணையத்தளங்கள் ஊடாக உண்மையற்ற அடிப்படைவாத செய்திகளை வெளியிடப்படுவதாகவும் இதனால மக்கள் தவறாக வழிநடத்தப்படுவதாகவும் தெரிவித்த அவர் இலங்கையில் வெளிநாட்டு புலனாய்வு சேவைகள் சில இயங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக செய்திகளை வெளியிடும் லங்கா ஈ நியூஸ் ஆசிரியர் சந்தருவன் சேனாதீர என்பவரை சர்வதேச காவல்துறையினர் ஊடாக கைது செய்து இலங்கைக்கு கொண்டு வந்து சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் விஜேயதாஸ ராஜபக்ஸ கூறினார்.