தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளிலும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு சட்டசபை தொகுதியிலும் இன்றுகாலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும். மாலை 5 மணிக்கு வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அவர்கள் வாக்கு போட அனுமதிக்கப்படுவார்கள்.
அரவக்குறிச்சியில் 39 வேட்பாளர்களும் தஞ்சாவூர் தொகுதியில் 14 பேரும், திருப்பரங்குன்றம் தொகுதியில் 28 பேரும் போட்டியிடுகிறார்கள்.
4 தொகுதிகளிலும் நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்த நிலையில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக அரவக்குறிச்சி தொகுதியில் 245 வாக்குச்சாவடிகளும், தஞ்சாவூரில் 276 வாக்குச்சாவடிகளும், திருப்பரங்குன்றத்தில் 291 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
பதற்றமான வாக்குசாவடிகளில் துணை ராணுவப் படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் அதிகாரிகள் தொகுதி முழுவதும் சுற்றிவந்து தேர்தல் ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்கள்.
வாக்குகள் எண்ணிக்கை வருகிற 22-ந்தேதி காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.