குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்து திருப்தி அடைய முடியாது என ஓய்வு பெற்ற முன்னாள் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கில் ஏற்பட்டுள்ள நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வராவிட்டால் பாரிய விளைவுகள் ஏற்படக் கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் உரிய முறையில் செயற்பட்டிருந்தால் ஹாவா குழு போன்ற குழுக்களின் செயற்பாடுகளை தடுத்திருக்கலாம் எனவும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் பல்வேறு பிரச்சினைகளினால் தமது பணிகளை உரிய முறையில் மேற்கொள்ள அஞ்சுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹாவா குழு தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என குறிப்பிட்டுள்ள அவர் புலனாய்வுப் பிரிவின் சில உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதனால் புலனாய்வுப் பிரிவினர் பணிகளை சுயாதீனமாக மேற்கொள்ள அஞ்சுவதாகவும் தெரிவித்துள்ளார்.
1 comment
நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்து திருப்தி அடைய முடியாது எனத் தெரிவித்து நீலிக் கண்ணீர் வடிக்கும் ஓய்வு பெற்ற முன்னாள் மேஜர் ஜெனரல் கமால் குணரட்னவின் அரசியல் வேட்கை புரிகின்றது! ஓய்வுக்குப் பின் எந்தப் பதவியையோ அன்றிப் பதவி நீடிப்பையோ பெறாத இவரின் ஆதங்கமெல்லாம், திரு. மகிந்த ராஜபக்ஷ தயவில் ஒரு அரசியல்வாதியாக வேண்டுமென்பதுதான் போலும்?
இப்பொழுது யார் கேட்டு இவர் வடக்கு கிழக்கு குறித்துக் கருத்துக் சொல்ல முனைகின்றார்? இவர் கூறுவதும் ஒரு வகையில் சரிதான்! இலங்கையின் எந்தப் பிராந்தியத்திலும் இல்லாத வகையில், வடக்கு கிழக்கில் மட்டும்தானே இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்? 2 லட்சம் வரையான இராணுவத்தினரில், ஒன்றரை லட்சம் வரையான இராணுவத்தினரை மாற்று இனத்தவர் செறிந்து வாழும் பிரதேசங்களில் குவித்து வைத்தால், பிரச்சனைகள் எழத்தானே செய்யும்?
ஹாவா குழுவின் செயற்பாடுகளைத் தடுக்கவேண்டுமாயின், அதற்கு ஒரே வழி இராணுவத்தினரை அங்கிருந்து அப்புறப்படுத்துவதுதான்! இதைத்தானே தமிழ் மக்களும் தமிழரசியல் தலைமைகளும், குறிப்பாக வடக்கு முதல்வரும் கூறுகின்றார்கள்! அது எப்படி இனவாதமாகும்? அம்பிட்டிய சுமனரத்தின தேரர் சொல்வதெல்லாம் இவர்களுக்குப், ‘பிரித்’, ஒத்துவதாகத் தோன்றும் வரை, நாட்டில் அமைதி ஏற்படப் போவதில்லை! பச்சை இனவாதக் கருத்துக்களைக் கக்கும் புத்த மதத் தலைவர்களைக் கண்டிக்கும் துணிவு இல்லாத பிரதிப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், வடக்கில் விடுதலைப் புலிகளை நினைவுகூரக் கூடாதாம்? இறந்தவர்கள் புலிகளேயானாலும், அவர்களும் ஒரு தாய்- தந்தையின் பிள்ளையோ, சகோதரனோ அன்றி ஒரு பெண்ணின் கணவனோ, ஒரு சிறுவன்/ சிறுமியின் தந்தையாகவோ இருந்திருக்கின்றார், என்ற உண்மையைக் கூட அமைச்சரால் புரிந்து கொள்ள முடியவில்லை?