குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கூட்டு எதிர்க்கட்சியினர் படைவீரர்களை இழிவுபடுத்துகின்றார்கள் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இராணுவ சதிப்புரட்சி இடம்பெறும் என கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன கூறியிருந்தமை தொடர்பில் அமைச்சர் திஸாநாயக்க இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
தினேஸ் குணவர்தனவின் இந்தக் கருத்து வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது என குறிப்பிட்டுள்ள அவர் உலகில் கௌரவமானதும், முன்னுதாரணமானதுமான வகையில் இலங்கைப் படையினர் கடமையாற்றி வருவதாகவும் அவ்வாறான படையினரை இழிவுபடுத்தும் நோக்கில் இராணுவ சதிப்புரட்சி பற்றி கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரச படையினர் இராணுவ சதிப் புரட்சியில் ஈடுபடுவார்கள் என தாமோ அரசாங்கமோ கருதவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் இவ்வாறான கருத்து கூட்டு எதிர்க்கட்சியின் கருத்தாகவே கருதப்பட வேண்டுமெனவும் எவ்வாறேனும் ஆட்சியை பிடிக்க முயற்சிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.