குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எவ்வித பணியையும் தமக்கு வழங்காது சம்பளத்தை வழங்கியதாக அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றின் மீது இலங்கையர் ஒருவர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். நியூயோர்க்கில் அமைந்துள்ள சிட்டி பல்கலைக்கழகத்திற்கு எதிராக இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையைப் பிறப்பிடமாகக்கொண்ட 72 வயதான ஹரேந்திர ஹெரால்ட் சிறிசேன என்ற நபரே இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்துள்ளார். 1995ம் ஆண்டில் தாம் பல்கலைக்கழகத்தில் இணைந்து கொண்டதாகவும் அந்தக் காலப்பகுதியில் சிறந்த முறையில் பணியாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும், 2003ம் ஆண்டின் பின்னர் திடீரென இளையவர் ஒருவரை பணிக்கு அமர்த்தி தம்மை ஓரம் கட்டியதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். வருடத்திற்கு 30 நாட்கள் மட்டுமே சிறு வேலைகள் வழங்கப்பட்டதாகவும் ஏனைய 171 நாட்கள் தாம் வெறுமனே பணி எதுவமின்றி காலத்தை கழித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
சிறிசேன கொலம்பிய பல்கலைக்கழகத்தின் முதுமாணி பட்டம்பெற்றுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 13 ஆண்டுகளில் 96000 அமெரிக்க டொலர்களை அவர் சம்பளமாக பெற்றுக்கொண்டுள்ளார். எனினும் எவ்வித பணியையும் ஆற்றாது அவர் இவ்வாறு சம்பளம் பெற்றுக்கொண்டுள்ளார். பாடல்களை கேட்பது, கிரிக்கட் மற்றும் உதை பந்தாட்ட போட்டிகளை ரசிப்பது, பல்கலைக்கழகத்தின் அருகாமையில் அமைந்துள்ள பூங்காவின் பறவைகளுக்கு உணவு ஊட்டுவது என தாம் காலத்தை கழித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக நிர்வாகத்தின் அசமந்த போக்கு உதாசீனத்தன்மையினால் தமக்கு பெரும் மன உலைச்சல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தமக்கு உரிய பணி வழங்கப்படவில்லை என பல தடவைகள் முறைப்பாடு செய்தும் அந்த முறைப்பாடுகளுக்கு எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இன ஒடுக்குமுறைக்கு உட்பட்டதாகவும் வயது உதாசீனம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்து பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.