குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும், புதிய நிருவாக தெரிவும் நேற்றைய தினம் 20.11.2016 கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவாளர் மண்டபத்தில் முற்பகல் 11 மணியளவில் நடைபெற்றது.
மேற்படி பொதுக்கூட்டத்திற்கு பிரதம விருந்தினராக வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் அ.நீக்கொலஸ் பிள்ளை, வடமாகாண தனியார் பேருந்து உரிமையாளர் சங்க ஒன்றியத்தின் தலைவர், கிளிநொச்சி மாவட்ட இலங்கை போக்குவரத்து சபை சாலை முகாமையாளர், ஏனைய மாவட்டங்களின் தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
போக்குவரத்து அமைச்சர் அவர்கள் தனது பிரதம விருந்தினர் உரையில், பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாகவும் எதிகாலத்தில் போக்குவரத்தோடு தொடர்புடைய சங்கங்கள் எவ்வாறு இருக்கவேண்டும் என்பது தொடர்பிலும் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக வீதி விபத்துக்களை குறைப்பது தொடர்பில் உரிமையாளர்களும், சாரதிகளும் கூடுதல் கவனம் எடுக்கவேண்டும் என்றும், குறிப்பாக மாணவர்கள் மற்றும் முதியவர்கள்மட்டில் சாரதி, நடத்துனர்கள் ஒழுக்கமான முறையிலும் கௌரவமான முறையிலும் நடத்த வேண்டும்மென்றும் பொதுமக்களுக்கு சௌகரியமான சேவையை வழங்கவேண்டும் எனவும் கேட்டுக்கொன்டுள்ளார்.
மேலும் போக்குவரத்தோடு தொடர்புபடுகின்ற சங்கங்களில் பல சங்கங்களில் நிதி மோசடிகள் காணப்படுவதாகவும் கொடுக்கப்பட்ட கடன்கள் வசூலிக்கப்படாது இழுபறிநிலையில் நிலுவையாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறான முறைகேடுகளுக்கு அந்தந்த காலப்பகுதியில் இருந்த சங்க உறுப்பினர்களும் புதிதாக பதவி ஏற்பவர்களும் உரிமையாளர்களுக்கு பொறுப்புக்கூற கடமைப்பட்டுள்ளார்கள் என்றும் சங்க நிருவாகத்தில் உள்ளவர்கள் உரிமையாளர்களின் நலன் தொடர்பில் கூடிய அக்கறை செலுத்தவேண்டும் எனவும் உரிமையாளர்கள் சங்கத்தின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு பக்கபலமாக இருக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் எதிர்வரும் வருடம் தை மாதம் போக்குவரத்து தொடர்புபடுக்கின்ற அனைத்து நலன்புரிச்சங்கங்களும், போக்குவரத்து நியத்திச்சட்டத்துக்கு அமைவாக அதிகாரசபையின் கீழ் பதிவுசெய்ய வேண்டும் என்றும், சங்கங்களின் நிதிசார்ந்த விடயங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் சட்டப்படியான கணக்காய்வுகள் மேற்கொள்ள வேண்டும் எனவும், மோசடிகள் காணப்படின் அதற்கு எதிராக சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வழி அனுமத்திப்பத்திரத்தை வைத்திருப்போர் சட்டமுரணாக அதனை ஏனையவர்களுக்கு விற்றிருப்பின், அனுமதிப்பத்திரத்தை கொடுத்தவர்களுக்கும் அதனை வாங்கியவர்களுக்கும் எதிராக கடுமையான சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவ்வாறான அனுமத்திப்பத்திரங்கள் எந்தவித முன்னறிவித்தலும் இன்றி இரத்துசெய்யப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
மேலும் அமைச்சர் அவர்கள் உரையாற்றுகையில் இன்றையதினம் புதிதாக தெரிவுசெய்யப்பட்டிருக்கும் நிருவாகக் குழுவானது சங்கத்தின் நோக்கினை அடைந்துகொள்வதர்க்கும், பொதுமக்களுக்கு தரமான சேவையினை வழங்குவதற்கும் தம்மாலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டதோடு, வடமாகணத்தில் ஏனைய மாவட்டங்கள் திரும்பிப்பார்க்கும் அளவிற்கு புதிய நிருவாகத்தின் செயற்ப்பாடுகள் தரமாக அமைவதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் கூறியிருந்தார்