குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி கனகாம்பிகைகுளத்தில் மக்களின் எதிா்ப்புக்களுக்கு மத்தியில் பொருத்தமற்ற இடத்தில் சுடலை அமைத்துள்ளமையால் மழைக்காலங்களில் புதைக்கவும் முடியாது எரிக்கவும் முடியாதுஇருப்பதாக பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனா். இது தொடா்பில் மேலும் தெரியவருவதாவது
பாடசாலைக்கு அருகில் மக்களின் குடியிருப்புக்களுக்கு நெருக்கமாக புதிய சுடலை அமைக்கும் பணியை அரசியல் தரப்புக்கள் மேற்கொண்ட போது அதற்கு மக்கள் எதிா்ப்புத் தெரிவித்திருந்தனர்.
தெரிவு செய்யப்பட்டுள்ள இடம் பொருத்தமற்றது, மழைக்காலங்களில் எந்தவொரு இறுதிக் கிரிகைகளையும் மேற்கொள்ள முடியாது எனவும் குறித்த இடம் தாழ்நிலப் பகுதி என்பதனால் மழைக் காலங்களின் பின்னரும் சில மாதங்களுக்கு சுடலை அமைக்கப்பட்டுள்ள இடத்தில் நீர் காணப்படும் எனவும் தங்களால் சுட்டிக்காட்டப்பட்டது எனவும் இருந்தும் பிரதேசத்தைச் சோ்ந்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினா் ஒருவரின் உதவியுடன் மக்களின் விருப்புக்கு மாறாக பல இலட்சங்கள் செலவு செய்து புதிய சுடலையை அமைத்துள்ளார் என பொது மக்கள் தெரிவிக்கின்றனா்.
அமைக்கப்பட்டுள்ள சுடலையில் பருவ மழைக்காலங்களிலும், அதன் பின்னா் சில மாதங்களுக்கும் இறந்தவா்களை எரிக்கவோ,புதைக்கவோ முடியாது எனவும் பிரதேச பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனா். மேலும் பிரதேசங்களில் மேற்கொள்கின்ற அபிவிருத்தி திட்டங்களின் போது பிரதேச பொதுமக்களின் அனுபவ ரீதியிலான கருத்துக்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்குமாறும் அவா்கள் கோருகின்றனா்.