குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிங்களத்தில் கடிதம் வந்தால் அதனை கிழித்து அனுப்பியவருக்கே திருப்பி அனுப்பும் வழக்கம் உடையவன் தான் என வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்,கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 66 அமர்வு வியாழக்கிழமை நடைபெற்றது. அதன் போது ஆளும் கட்சி உறுப்பினர் அ.பரம்சோதி தனக்கு முதலமைச்சரினால் அனுப்பப்பட்ட ஆவணம் ஒன்று ஆங்கில மொழியில் இருந்ததாகவும் , அதன் தமிழாக்கம் வழங்கப்படாமைக்கான காரணம் என்ன எனவும் முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்கு பதிலளித்த முதலமைச்சர் மொழிபெயர்ப்பாளர்கள் பற்றாக்குறை காரணமாகவே அதனை தமிழாக்கம் செய்ய முடியவில்லை என தெரிவித்தார். அதனை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானமும் ஏற்றுக்கொண்டு வடமாகாணத்தில் பல திணைக்களங்களில் மொழி பெயர்ப்பாளர்கள் பற்றாக் குறை நிலவுகின்றது. அதற்கு உதவுமாறு ஏசியன் பவுண்டேசனிடம் கோரி உள்ளோம். என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் , எனக்கு சிங்கள மொழியில் கடிதங்கள் வந்தால் நான் அதனை கிழித்து அனுப்பியவருக்கே திருப்பி அனுப்பி விடுவேன். எனவே அனைவரது மொழி உரிமையும் மதிக்கப்பட வேண்டும் இங்கு சபையில் உள்ள சிங்கள உறுப்பினர்களுக்கு சிங்கள மொழியில் கடிதங்கள் அனுப்ப பட வேண்டும்.
மொழி பெயர்ப்பாளர்கள் இல்லை எனும் பிரச்சனை பல காலமாக செல்லப்பட்டு வருகின்றது. ஆனால் இதுவரை அதற்கு தீர்வு காணப்படவில்லை. வடமாகணத்தில் பாண்டித்தியம் பெற்ற மொழிபெயர்ப்பாளர்கள் பலர் உள்ளனர் அவர்களுக்கு உரிய கொடுப்பனவுகள் கொடுக்க முன் வந்தால் அவர்கள் மொழி பெயர்ப்பு செய்து தருவார்கள் என தெரிவித்தார்.