குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கடந்த காலங்களைப் போன்று இலங்கையர்கள் தொடர்ந்தும் கிணற்றுத் தவளைப் போன்று வாழக்கூடாது என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச ராஜதந்திர பயிற்சி நிறுவனத்தில் உரையாற்றிய போதுஇதனைக் குறிப்பிட்டுள்ள அவர் எதிர்காலம் பற்றி சிந்திக்க வேண்டிய காலம் மலர்ந்துள்ளது எனவும் யுத்தம் காரணமாக ஏற்பட்டிருந்த நெருக்கடியான நிலைமைகள் நீங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பழைய விடயங்களில் தொடர்ந்தும் தங்கித் தேங்கியிருப்பது பொருத்தமாகாது எனவும் அதற்காக பழையனவற்றில் பாடம் கற்றுக்கொள்வதனை நிராகரிக்க வேண்டியதில்லை எனவும் குறிப்பிட்டுள்ள அவர் கடந்த காலங்களில் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதற்கு ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
நல்லிணக்கத்திற்கான பயணம் மலர்ப்பாதையாக அமையாது எனவும் பல்வேறு சவால்கள் ஏற்படக் கூடுமெனவும் தெரிவித்துள்ள அவர் நாட்டின் குறைபாடுகளை பற்றி குற்றம் சுமத்துவதில் அதிக நேரத்தை செலவிடுவதாகவும் அவற்றை எவ்வாறு திருத்திக் கொள்வது என்பது குறித்து கவனம் செலுத்தப்படுவதில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.