குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சமஸ்டி முறையிலான தீர்வுத்திட்டத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிராகரிப்பதாக போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக சமஸ்டி ஆட்சி முறைமை அறிமுகம் செய்யப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என குறிப்பிட்டுள்ள அவர் வடக்கு கிழக்கு மீள இணைக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சமஸ்டி ஆட்சி முறைமை தொடர்பான முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டால் அதனை சுதந்திரக் கட்சி நிராகரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து இன சமூகங்களும் ஒன்றிணைந்து சமாதான வாழ வேண்டும் என்பதே சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடாக அமைந்துள்ளது எனவும் புதிய அரசியல் சாசனம் தொடர்பில் ஏனைய அரசியல் கட்சிகளுடன் சுதந்திரக் கட்சி பேச்சுவார்த்தை நடத்த உள்ளது எனவும் தெரிவித்துள்ள அவர் நாட்டின் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் இணைந்தே அரசியல் சாசனத்தை உருவாக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
1 comment
‘புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக சமஸ்டி ஆட்சி முறைமை அறிமுகம் செய்யப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை’, என்று கூறும் அமைச்சர் திரு. நிமால் சிறிபால டீ சில்வா, சுதந்திரக் கட்சி சார்பில் முன்வைத்துள்ள தீர்வுதான் என்ன? ‘புதிய அரசியல் சாசனம் தொடர்பில் ஏனைய அரசியல் கட்சிகளுடன் சுதந்திரக் கட்சி பேச்சுவார்த்தை நடத்த உள்ளது’, என்று கூறியிருப்பதன் மூலம் அவர்கள் எந்தவொரு தீர்வுத் திட்டத்தைத்தானும் இதுவரை முன்வைக்கவில்லை, என்பது புரிகின்றது?
சுதந்திரத்துக்குப் பின்னரான கடந்த 68 வருடங்களில், சுதந்திரக் கட்சி மட்டுமல்ல, ஐக்கிய தேசியக் கட்சி உட்பட, எந்தவொரு சிங்களக் கட்சிகளும், சிறுபான்மையினருக்கான தீர்வுத் திட்டமென்று ஒன்றை என்றும் முன்வைத்ததில்லை, என்பதே வரலாறாகும்! மேலும், காலத்துக்கு காலம் தமிழ் தலைமைகள் முன்வைக்கும் தீவுர்வுத் திட்டங்களின் அடிப்படையில் ஒப்பந்தங்களைச் செய்துவிட்டு, பின் இன/ மதவாதிகளின் எதிர்ப்புக்கு காரணமாக அவற்றைக் கிழித்துப் போட்ட வரலாறுகளும், ஒன்று இரண்டல்ல!
இந்தத் தூங்கு மூஞ்சி அமைச்சரான திரு. நிமால் சிறிபால டீ சில்வா, ஒரு மூத்த அரசியல்வாதியாகவிருந்தபோதும், ‘சமஷ்டி’, என்ற வார்த்தை குறித்த தெளிவற்றவராகவே காணப்படுகின்றார்? சமஷ்டி முறையில், பிராந்தியங்களுக்குச் சில அதிகாரங்கள் பகிரப்படுகின்றபோதும், மத்தியில் ஒரு அமைப்பு பிராந்தியங்களை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டதாக இருக்குமென்றால், அதுவும் ஒரு வகையில் ஒற்றையாட்சித் தீர்வுதான், என்பதை உணராத இவர் போன்றோர், தமது இருப்புக்கு அவசியமான இனப் பிரச்சனையை என்றைக்கும், ‘நீறு பூத்த நெருப்பாக’, வைத்திருக்கவே விரும்புகின்றார்கள்?
பல்லின, பல்மத இனக் குழுமங்களைக் கொண்ட உலகின் பல நாடுகள், சமஷ்டி முறையிலான ஆட்சி முறையையே கையாள்கின்றார்கள்! பலம் பொருந்திய அமெரிக்கா, இங்கிலாந்து உட்படச் சிறிய நாடான சுவிட்சர்லாந்து வரை, எல்லா நாடுகளும் சமஷ்டி ஆட்சி முறையைப் பின்பற்றினாலும், தமது தேவைகளுக்கேற்ப அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதில் சில மாறுபாடுகளைக் கொண்டிருக்கின்றபோதும், வெற்றிகரமாக ஆட்சியைக் கொண்டு செல்வது கண்கூடு!
இலங்கையைப் பொறுத்த வரை, இன்றில்லாது போனாலும் என்றோ ஒருநாள், ‘இனப்பிரச்சினைக்கான ஒரு நிரந்தரமான தீர்வு’, சமஷ்டி ஆட்சி முறையினாலேயே எட்டப்படும், என்பதை யாராலும் மறுக்க முடியாது!