கிழக்கு மாகாணத்தில் இன மத மற்றும் மொழி பாரபட்சமின்றி அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்
முஸ்லிங்கள்,தமிழர்கள் மற்றும் சிங்களவர் என்ற வேறுபாடு கிழக்கு மாகாண அபிவிருத்தியில் ஒரு போதும் பாரக்கப்படுவதில்லை எனவும் கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தற்போது கிழக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் வினவிய போதே கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனைத் தெரிவித்தார்.
சில அரசியல்வாதிகள் கிழக்கின் அபிவிருத்தி தொடர்பில் ஒரு தவறான தோற்றப்பாட்டை உருவாக்க முயல்வதாகவும் அவர்கள் தமது சொந்த அரசியல் இருப்புக்காக இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மாகாணத்தின் அபிவிருத்திக்கான நிதியைப் பெற்றுக் கொள்ள பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளதாகவும் அவ்வாறான சூழ்நிலையில் இவ்வாறு சிலர் தமது குறுகிய அரசியல் இலாபங்களுக்காக இன வேறுபாடுகளையும் பிரதேச வேறுபாடுகளையும் உருவாக்க முற்படுவதன் மூலம் குறித்த போராட்டங்கள் அர்த்தமற்றவையாக விடும் எனவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்
கிழக்கில் தற்போது மூவினத்தவர்களும் சகல கட்சிகளும் அமைச்சரவையிலும் ஆளுந்தரப்பிலும் அங்கம் வகிக்கும் ஆட்சியே முன்னெடுக்கப்படுவதாகவும் இதுவே கிழக்கு மாகாணத்தின் சமத்துவத்துக்கு சான்று பகர்வதாகவும் கிழக்கு முதலமைச்சர் தெரிவித்தார்.