தேசிய போராட்டத்தையும் தேசிய இயக்கத்தையும் கொச்சைப்படுத்த வேண்டாம் என தேசிய மொழிகள் மற்றும் தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசனிடம் வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டின் போது அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் மனோகணேசன் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தினை பயங்கரவாத இயக்கம் எனவும் மாவீரர் தினத்தினை அனுஷ்டிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார் எனவும் தெரிவித்த சிவாஜிலிங்கம் 2002 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அனைத்து தமிழ் கட்சிகளையும் அழைத்துப் பேசிய போது மனோ கணேசன் திருப்தியான பல கருத்துக்களை முன்வைத்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார் எனவும் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இணைந்து பல விடயங்களை செய்வோம் என தெரிவித்திருந்தார் எனவும் அன்று பயங்கரவாதிகள் என தெரியாமல் இன்றுதான் தெரிகின்றதா எனவும் சிவாஜிலிங்கம் மனோகணேசனிடம் கேள்வி எழுப்பினார்.
மேலும் உங்களின் கட்சியின் சின்னமான ஏணிச் சின்னத்தில் ஏறி யானையில் ஏறினீர்கள். இன்று ஏறி வந்த ஏணியை தட்டி விழுத்துகின்றீர்கள் என்பதே மிகக்கவலையான விடயம் எனவும் அந்த ஏணியாக வடகிழக்கு மக்களும் இருந்தார்கள் எனவும் அதேபோன்று மலையக மக்களையும் தயவு செய்து புறக்கணிக்க வேண்டாம் எனவும் சிவாஜிலிங்கம் கேட்டுக்கொண்டார்.
அமைச்சு பதவி வேண்டுமென்றால் தாராளமாக குளிர்காயலாம் அல்லது ஒட்டிக்கொண்டிருக்கலாம். அதற்காக தேசிய போராட்டத்தினையும் தேசிய இயக்கத்தினையும் கொச்சைப்படுத்த வேண்டாம் எனவும் எந்த சக்தி வந்தாலும் தலை வணங்கப் போவதில்லை எனவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் உட்பட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாவீரா்தினத்தினை நினைவு கூர்ந்து நிலைமையினை புரிய வைத்துள்ளார்கள் எனவும் அவற்றினை நன்குபுரிந்துகொள்ள வேண்டுமென்றும்என்றும் சிவாஜிலிங்கம் தெரிவித்தாா் .