மொகாலியில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றுள்ளது.
நாணயசுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து தனது முதல் இன்னிங்சில் 283 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துப்பெடுத்தாடிய இந்திய தனது முதல் இன்னிங்சில் 417 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
நேற்று மாலை ஆரம்பமான 2வது இன்னிங்சில் விளையாட ஆரம்பித்த இங்கிலாந்து அணி இன்று மதியம் உணவு இடைவேளைக்கு பின்பாக 236 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இங்கிகிலாந்து அணியில் ஜோ ரூட் அதிகபட்சமாக 78 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இந்திய அணி சார்பாக அஸ்வின் 3, முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா, ஜெயந்த் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்தியா வெற்றிபெற 103 ஓட்டங்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆடத் தொடங்கிய இந்திய அணி 21வது ஓவரிலேயே 2 விக்கெட் இழப்பிற்கு 104 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது.
ராஜ்கோட்டில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையிலும் விசாகபட்டினத்தில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றதன்மூலம், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 4வது டெஸ்ட் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் டிசம்பர் 8ம் திகதியும் கடைசி டெஸ்ட் போட்டி 16ம் திகதி சென்னையில் ஆரம்பமாகவுள்ளன.