Home பிரதான செய்திகள் முன்னாள் வானொலிப் பணிப்பாளர் பொன்மணி குலசிங்கம் – எஸ் எம் வரதராஜன் -நியூசீலாந்து:

முன்னாள் வானொலிப் பணிப்பாளர் பொன்மணி குலசிங்கம் – எஸ் எம் வரதராஜன் -நியூசீலாந்து:

by admin
 
மூத்த ஒளிபரப்பாளர் பொன்மணி குலசிங்கம் அம்மையார் அவர்கள் அவுஸ்திரேலியாவில் காலமாகிய செய்தியை  மூத்த ஒளிபரப்பாளர் திரு விக்னேஸ்வரன் அவர்கள் கனடாவிலிருந்து முகநூலில் இடுகை செய்திருந்தார். பொன்மணி அவர்களுக்கு  வயது 88.
பொன்மணி அவர்களை  நான் முதலில் ரூபவாஹினியில் சந்தித்துள்ளேன்.
2000 களில் இலங்கை வந்திருந்த பொழுது – சக்தியில் காலைக்கதிர் நிகழ்ச்சிக்கு அதிதியாக அழைத்திருந்தோம்.
நேரடியாக ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சியில் – “உங்களுடன் ஒருவர் பேச விரும்புகிறார் .. நன்கு தெரிந்த மறக்கமுடியாத ஒரு நேயர் என்று சொல்ல அவர் “சரி அவருடன் பேசுவோம்..எங்கே இணையுங்கள் ” என்று சொல்ல நாம் இணைத்துவிட்டோம்.
தொலைபேசியின் மறுமுனையில் இருந்தவர் அமரர் காவலூர் இராசதுரை அவர்கள் .
சில வினாடிகள் …நிசப்தம்…காவலூர் கதையைத் தொடங்கினார்…” வணக்கம்  திருமதி  குலசிங்கம் !” என்றார்  காவலூர் .
வணக்கம் எப்படி நீங்கள் இருக்கிறீர்கள்…? என்று தொடங்கி …பழைய சம்பவங்கள் சிலவற்றை இருவரும் பகிர்ந்தனர் .
 நிகழ்ச்சி முடிந்தது . கலையகத்திலிருந்து வெளியே வந்த பொன்மணி அவர்கள் என்னைப்பார்த்து ” நல்ல வேலை செய்தீர் …!” என்றார்.
உடனடியாக கைத்தொலைபேசிக்கு தொடர்புகொண்ட  காவலூர்- ” மறுமுனையில் சிரித்துக்கொண்டேயிருந்தார் ..பின்னர்  அவரும்  மனதுக்கு ஆறுதலான ஒரு வேலையைச்  செய்திருக்கிறீர்கள் “..என்றார். பதவிக்காலத்தில் இருவரும் முரண்பட்ட நிகழ்வுகள் இடம்பெற்றதாக அறிந்துள்ளோம். ஒலி ஒளிபரப்புத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு அவை தெரியும். இருவரும் இன்று நம்முடன் இல்லை. மீளாத் துயிலில்  நிம்மதியாய் உறங்குகிறார்கள்.
 அப்படி உறங்க வேண்டும் என்பதே எமது பிரார்த்தனை !
இன்று ஊடகத்துறையில் பணியாற்றுபவர்களுக்காக இத்தகவலை இங்கு குறிக்கவேண்டியிருந்தது. பொன்மணி, குலசிங்கம் ஒரு   இசைக் கலைஞர். ஆவார் . இவர் உயர்தரக் கல்வி வரை பம்பலப்பிட்டி திருக்குடும்பக் கன்னியர் கல்லூரியில் பயின்று, இசைக் கல்வியைச் சென்னை கலாஷேத்திராவில் பயின்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் சங்கீத சிரோன்மணி பட்டத்தையும் கலாஷேத்திராவில் வாய்ப்பட்டுக்கான முதற்தர டிப்ளோமாச் சான்றிதழையும் பெற்ற ஒருவர் .

இவர் தனது பதினான்காவது வயதிலிருந்து இசைத் திறமையைக் காட்டும் வானொலிப் பாடகியாக விளங்கினார். 1956 ஆம் ஆண்டு சிறுவர் மற்றும் மகளிர் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக வானொலியில் சேர்ந்து கொண்ட இவர், படிப்படியாக உயர்ந்து இசைக் கட்டுப்பாளர், மேலதிகப் பணிப்பாளர், பணிப்பாளர் என்ற நிலையை எய்தினார்.இவர் புகழ்பெற்ற இசையமைப்பாளர் முத்துசாமி தலைமையில் இயக்கிய இலங்கைப் பாடகர்களின் ஈழத்துப் பாடல்கள் வரவேற்பைப் பெற்றன. இப்பாடல்களை  அக்காலத்தில் சிங்கப்பூர் வானொலி ஒலிபரப்பிற்காகக் கொள்வனவு செய்தமை குறிப்பிடத்தக்கது

 

நானறிய…

 நான் நினைக்கிறேன்..இவர்   ஒழுங்கு செய்திருந்த நாட்டிய நாடகம் போன்ற நிகழ்ச்சி  ஒன்று…  ரூபவாஹினியில் ஒளிபரப்பாக இருந்த இலங்கையின் முதலாவது தொலைக்காட்சி நாட்டிய நிகழ்வாக  என்ற பெயரைப் பெற்றுவிடும் என்று முகாமைத்துவம் – இதனை சற்றுப்  பின்போடச்சொல்லி  சிங்களத்தில் தயாரித்த நாட்டிய நாடகம் ஒன்றை (உடன் தயாரித்து) அதனை இதற்கு முன்னர் ஒளிபரப்பியதாக நாம் அங்கு ஒரு வரலாற்றை  அறிந்தோம்.
ஏனெனில் இலங்கை ரூபவாஹினியின்  முதலாவது தொலைக்காட்சி நாடகம் தமிழ் நாடகம் என்ற வரலாறு ஏற்கனவே பதியப்பட்டு, அமைச்சு மட்டத்தில்  ஏச்சு வாங்கிய நிலையில் மீண்டும் முதலாவது என்ற பெயரை நாட்டிய நாடகத்திலும் “தமிழ்” பெறக்கூடாது என்ற அச்சத்தின் காரணமாகவே – தயாரித்து தொகுத்து ஒளிபரப்பிற்கு ஆயத்தமாக ஒளிநாடா வைப்பகத்திற்கு கொடுக்கப்பட்ட நிலையில் -நிகழ்ச்சி நிரலில் தாமதம் செய்யப்பட்டது என ஒரு தகவல் உண்டு.
1982 இல் தான் ரூபவாஹினி முறைப்படி ஆரம்பமானது. ஆனால் தமிழ் நாடகமான கண்ணாடி வார்ப்புகள்  1981   டிசம்பரிலேயே அதன் கலையகத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்டுவிட்டமையும்  . அது ஆரம்பித்த பின்னர் தான் சிங்கள நாடகங்களை  ஒளிப்பதிவு செய்யத் தொடங்கினர்- என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரூபவாஹினி தொலைக்காட்சி ஆரம்பித்த நாட்களில் இலங்கை வானொலியின் பணிப்பாளராகப் பணியாற்றிய  இவர் அன்று  வானொலி அறிவிப்பாளராகப் பணியாற்றிய அண்ணர் அப்துல் ஹமீதுடன்  அங்கு வந்து சில நாட்டிய  நிகழ்ச்சிகளை ஒளிப்பதிவு செய்ததாக நான் அறிந்துள்ளேன்.
அன்று வானொலியில்  பணியாற்றிய பலர் புதிய ஊடகமான தொலைக்காட்சிக்குள் நுழைவதற்கு ஆர்வம் காட்டியிருந்த போதிலும் சிலருக்கே அந்த வரப்பிரசாதம் கிடைத்தது.
திருமதி ஞானம் இரத்தினம் ரூபவாஹினி தமிழ்ப்பிரிவின் பணிப்பாளரானார். வானொலி நிலையத்தில் பணியாற்றிய சில  தமிழர்கள் மட்டும்    ரூபவாஹினி தமிழ்ப்பிரிவு செய்திப்பிரிவு விவரணப்பிரிவு கல்விச்சேவை பொறியியற்பிரிவு என  இணைய வாய்ப்புக்கு கிடைத்தது.
இலங்கை வானொலியின் பணிப்பாளராக திருமதி பொன்மணி குலசிங்கம் பணியாற்றிய காலத்தில் சிறுவர் நிகழ்ச்சியிலிருந்து அறிமுகமான கலைஞர்கள் பலர் அங்கு அறிவிப்பாளர்களாகப் பணியாற்றினார் கள் .அப்துல் ஹமீத் , ஜோர்ஜ் சந்திரசேகரன் , நடராஜசிவம் மயில்வாகனம் சர்வானந்தா  போன்றவர்களை  அன்புடன் “அடா” என்று அழைத்த வானொலிப் பணிப்பாளர் பொன்மணி என்று இன்றும் சொல்வார்கள். இவர்களை தமது செல்லப்பிள்ளைகளாக இவர் வழிநடத்திவந்ததாகச் சொல்லப்படுவதுண்டு . இவர்களும் ஏனைய ஊழியர்களும்  அவரை அம்மா எனவும்அ மரர் ராஜகுருசேனாதிபதி கனகரத்தினம் போன்றவர்கள்  “அக்கா” என்றும் அழைக்க  அவருடைய தமிழ்ச் சேவை சுமுகமாக  இயங்கியது.
இவர் பணிப்பாளராக இருந்த காலத்தில் தான் தமிழ்சசேவையில் பல சேவைகள் விஸ்தரிக்கப்பட்டன என்ற வரலாறுமுண்டு. . அதாவது மத்தியகிழக்கு
சேவை , யாழ் பண்ணை வானொலி நிலையம் என்பன இவருடைய காலத்தில்  உருவானவை  ..
நிமிர்ந்த நடை  , நேரிய பார்வை , உயர்ந்த தோற்றம் ,சிறந்த ஆளுமை மிக்க ஒருவராக நான் அவரைக் கண்டுள்ளேன்.
இலங்கை வானொலியின் சிங்கள ஊழியர்கள் முதல் பணிப்பாளர்கள் வரை இவருக்கு நல்ல மரியாதையை வழங்கினார்கள் என்றால் மிகையல்ல.
“எல்லாவற்றுக்கும் இவ  கேட்பதுக்கெல்லாம் ஓம் மடம் ..யெஸ்  மிஸிஸ் குலசிங்கம் என்றுவிட்டு... பிறகு தங்கட வழமையான வேலையைக் கட்டிவிடுவான்கள்..” என்றும் ஒரு மூத்த ஒளிபரப்பாளர் இவர் பற்றி ஒருமுறை சொன்னதை இங்கு இந்நாட்களில் குறிப்பது பொருத்தமாகும்.
ரூபவாஹினியின் ஆரம்பத்தில் இலங்கை மன்றக்  கல்லூரியின் அனுசரணையுடன் ஒரு கலாசார நிகழ்ச்சி மாதம்  தோறும் ஒளிபரப்பானது. சிங்கள  தமிழ் நிகழ்ச்சிகள்  கலந்த இந்த நிகழ்ச்சியில்-  ஆரம்பத்தில் இதற்கான தமிழ் நிகழ்ச்சி அம்சப்  பொறுப்பை இவரே மேற்கொண்டார்.
இலங்கை ஒலி பரப்புக் கூட்டுத்தாபனத்தின் வாத்தியக்  குழு வில் மெல்லிசைக்கு என்று தமிழக கலைஞர்களைக் கொண்ட குழுவை அமைத்தவர் திருமதி பொன்மணி குலசிங்கம் அவர்களாவர்.
பொன்மணி அவர்கள் 1983 இன அழிப்பு வன்செயலை நேரில் கண்டு அதன் விளைவினை அனுபவித்த ஒலிபரப்பாளரும் கூட.
இலங்கை வானொலித் தமிழ்சசேவையின் வரலாற்றிலும் இலங்கைத் தொலைக்காட்சியின்  தமிழ் நிகழ்ச்சிகளின் பயணத்திலும் பொன்மணி குலசிங்கம்   அம்மாவின் பெயர் நினைவில் நிறுத்தப்பட வேண்டிய ஒன்றாகும்.
  (படத்தில் : இடமிருந்து- இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய குமரலிங்கம் ,கனடாவிலிருந்து கடந்த வருடம் அவுஸ்திரேலியா சென்றிருந்த  விக்னேஸ்வரன்  திருமதி பொன்மணியுடன்.)

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More