குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற தினமன்று அலரி மாளிகைக்கு சென்ற வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் யார் என ஜே.வி.பி கேள்வி எழுப்பியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அப்போது அலரி மாளிகையில் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அப்போதைய வெளிவிவகார அமைச்சில் கடமையாற்றிய அதிகாரிகள் அலரி மாளிகைக்கு சென்றிருந்ததாகவும் அவர்கள் யார் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்பட வேண்டுமெனவும் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
சுயாதீன அரசாங்க அதிகாரிகள் என்ற ரீதியில் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் அவ்வாறு செயற்பட முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் முன்னாள் முதல் பெண்மணி சிராந்தி ராஜபக்ஸ வெளிநாட்டு ஹோட்டல்களில் தங்கியமைக்காக நாள் ஓன்றுக்கு நாற்பத்து ஐந்து லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் இந்த ஹோட்டல் கட்டணங்கள் வெளிவிவகார அமைச்சின் ஊடாக செலுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.