குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இரண்டு ஆண்டுகளில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வெளிநாட்டுப் பயணச் செலவுகள் சுமார் 230 கோடி ரூபா என தெரிவிக்கப்படுகிறது. வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.
2012ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஸ உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வெளிநாட்டு விஜயங்களுக்காக 2.3 பில்லியன் ரூபா பணத்தை செலவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் இளைய புதல்வர் ரோஹித ராஜபக்ஸ ஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொள்ள வெளிவிவகார அமைச்சு 20 லட்சம் ரூபா பணத்தை வழங்கியுள்ளதாகவும் எந்த அடிப்படையில் ரோஹித ஜப்பானுக்கு விஜயம் செய்தார் என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் லொஸ் ஏன்ஜல்ஸ் நகரில் கொன்சோல் அதிகாரியொருவர் இ;ல்லாத காலத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு அமர்த்தி அந்த வீட்டில் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஸவின் புதல்வர் தங்கியிருந்தார் எனவும் கோதபாயவின் புதல்வர் 21 மாதங்கள் குறித்த வீட்டில் தங்கியிருந்தார் எனவும் அதற்கான செலவுகளை வெளிவிவகார அமைச்சு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2013ம் ஆண்டில் வீடு வாடகைக்கு அமர்த்தப்பட்டதாகவும் இதற்காக 27 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஐக்கிய நாடுகள் அமைப்பில் ஆற்றிய உரைகளை இங்கிலாந்து நிறுவனமொன்று தயாரித்துள்ளதாகவும் அதற்காக 300 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வெளிவிவகார அமைச்சில் மோசடிகள் இடம்பெற்ற காலத்தில் அப்போதைய வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆபிரிக்காவில் காணப்படும் வனவிலங்கு சரணாலயங்களில் காலத்தை கழித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.