குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உலகின் மிகப் பெரிய நத்தார் மரம் அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இலங்கை துறைமுக அதிகாரசபையினால் சற்று முன்னர் இது குறித்து உத்தியோகபூர்வமாக ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
துறைமுக அபிவிருத்தி அமைச்சினால் காலி முகத் திடலில் உலகின் மிகப் பெரிய நத்தார் மரம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இவ்வாறு பாரிய பொருட் செலவில் நத்தார் மரத்தை அமைப்பதனை தவிர்த்து அந்தப் பணத்தை ஏழை எளியவர்களுக்கு வழங்குமாறு மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரியிருந்தார். 325 அடி உயரத்தில் இந்த நத்தார் மரம் அமைக்கப்படவிருந்தது. அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அமைப்பினால் இந்த நத்தார் மரம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. கத்தோலிக்க பேராயர்களின் கோரிக்கைக்கு அமைய இந்தப் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
காலி முகத்திடலில் அமைக்கப்படும் நத்தார் மரம் பண விரயமான செயல் – கர்தினால்
Dec 7, 2016 @ 07:02
காலி முகத் திடலில் அமைக்கப்படும் நத்தார் மரம் பண விரயமான செயல் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கின்னஸ் உலக சாதனை படைக்கும் நோக்கில் காலி முகத்திடலில் உலகின் மிகப் பெரிய நத்தார் மரமொன்றை அமைக்கும் பணிகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவின் துறைமுக அபிவிருத்தி அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எனினும், இந்த நத்தார் மரம் அமைக்கும் நடவடிக்கையை கத்தோலிக்கச் சபை நிராகரிப்பதாக தெரிவித்துள்ள கர்தினால் நத்தார் பண்டிகையின் மெய்யான அர்த்தம் ஆடம்பரமான ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் அல்லது வீண் செலவுகளினால் பூரணமாகாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏழை எளிய மக்களுக்கு உதவுவதே நத்தாரின் மெய்யான அர்த்தம் எனவும் இருப்பவற்றை இல்லாதோருடன் பகிர்ந்து கொள்ள வேண்டியது அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.