குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இந்தியாவுடனான எட்கா மற்றம் சீனாவுடனான சுதந்திர உடன்படிக்கை என்பன குறித்து அனைத்து தரப்பிற்கும் தெளிவுபடுத்தப்பட உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உத்தேச இரண்டு உடன்படிக்கைகள் தொடர்பில் அனைத்து தரப்பினரையும் தெளிவுபடுத்த உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எட்கா உடன்படிக்கை குறித்து கூட்டு எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மக்களின் ஆணைக்கு புறம்பான வகையில் எவ்வித உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயங்கள் குறித்து பாராளுமன்றை தெளிவுபடுத்த உள்ளதாகவும், ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அந்த திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னரே உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய இலங்கை வர்த்தக உடன்படிக்கை தொடர்பாக தேவையற்ற ஐயத்தினை ஏற்படுத்த வேண்டாம் – ஜனாதிபதி
இந்திய இலங்கை வர்த்தக உடன்படிக்கை தொடர்பாக நாட்டு மக்களிடமும் ஏனைய துறையினரிடமும் தேவையற்ற ஐயத்தினை ஏற்படுத்த வேண்டாமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
முதலில் அமைச்சரவைக்கும் பின்னர் பாராளுமன்றத்திற்கும் சமர்ப்பித்து, பாதகமான விடயங்கள் காணப்படுமெனின் அவற்றை நீக்கியதன் பின்னர், எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒப்பந்தம் ஒன்றிலேயே அரசாங்கம் கையெழுத்திடும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சின் செலவு விடயம் தொடர்பில் இன்று (07) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசாங்கம் என்ற வகையில் இந்தியாவுடன் மட்டுமன்றி பொருளாதார ரீதியில் வலுவான பொருளாதார ஒத்துழைப்பினைப் பெற்றுக் கொள்ளக்கூடிய சகல நாடுகளுடனும் ஒப்பந்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் எதிர்பார்க்கின்றது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.