குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நவீன ஆயுதங்களுடன் கூடிய இராணுவம் உருவாக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சு தொடர்பிலான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தற்காலத்திற்கு பொருத்தமான வகையில் ஆயுதங்கள் இராணுவத் தளவாடங்கள் கொள்வனவு செய்யப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இந்தத் திட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் படையினருக்கு உரிய ஆயுதங்கள் உபகரணங்கள் வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தியுள்ள பிரதமர் விமானப்படையினருக்கு விமானங்களை வழங்குவதற்கு பதிலாக கடந்த அரசாங்கம் உக்ரேய்னிலிருந்து இரும்புத் துண்டுகளைப் பெற்றுக் கொடுத்திருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
சுயாதீனமான ஒருவரை புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியாக நியமிக்க இராணுவத் தளபதிற்கு பூரண அதிகாரத்தை தமதுஅரசாங்கம் வழங்கியுள்ளதாகவும் தேவையற்ற வகையில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் புலனாய்வுப் பிரிவில் இணைத்துக்கொள்வதில் பயனில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச தர நிர்ணயங்களுக்கு ஏற்ற வகையில் தற்காலத்திற்கு பொருத்தமான ஆயுதங்கள் உபகரணங்களுடன் கூடிய இராணுவத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.