தமிழகத்தில் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்றதனைத் தொடர்ந்து புதிதாக பதவி ஏற்ற அமைச்சர்களின் கூட்டம் இன்று காலை ஆரம்பமாகியுள்ளது.
முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5ம் தேதி மரணமடைந்ததனைத் தொடர்ந்து நிதி அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அன்றிரவு புதிய முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டதுடன் அவரது தலைமையில் அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று காலை 11.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. இந்த கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு தொடர்ந்து இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சரவை சகாக்கள் அஞ்சலி செலுத்திவிட்டு கோட்டைக்கு சென்றனர்.
ஜெ மறைவுக்குப் பின்னர், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நாளை தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டம்:-
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நாளை (சனிக்கிழமை) தமிழக அமைச்சரவைக் கூட்டம் இடம்பெவுள்ள நிலையில் அது தமிழக அரசியலில் பெரும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வராக கடந்த 6-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், நாளை அவரது தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இதனால், இந்த அமைச்சரவைக் கூட்டம் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
நாளை காலை 11.30 மணியளவில் தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி காலமானார். இதையடுத்து, முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார்.
இதனையடுத்து, அதிமுகவை வழி நடத்தப் போவது யார் என்பதை முடிவு செய்யும் விதமாக அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வியாழக்கிழமை போயஸ் தோட்ட இல்லத்தில் ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் நாளை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.