“கேப்பாப்புலவிற்கு வருகை தரும் ஜனாதிபதியிடம், எமது கிராமத்தினை முழுமையாக விடுவிக்க வேண்டும் என்பதையே வலியுறுத்துவோம்” – மக்கள்:-
கேப்பாப்புலவிற்கு வருகை தரும் ஜனாதிபதியிடம் இராணுவ முகாம்களை அகற்றி கேப்பாப்புலவு கிராமத்தினை முழுமையாக விடுவிக்க வேண்டும் என்பதையே வலியுறுத்துவோம் என கேப்பாப்புலவு மக்கள் தெரிவிக்கின்றனர். இடம்பெயர்ந்த போது இராணுவத்தினர் எமது கிராமத்தினை முழுமையாகக் கைப்பற்றி இராணுவ முகாம்களை எமது பூர்வீக நிலத்தில் அமைத்தனர். எம்மை நலன்புரி நிலையங்களில் இருந்து அழைத்து வந்த இராணுவத்தினர் 2012ம் ஆண்டில் சூரிபுரம் காட்டுப்பகுதியில் மாதிரிக் கிராமத்தினை உருவாக்கி அடிப்படை வசதிகள் குறைந்த நிலையில் இதுவரை வாழ்ந்து வருகின்றோம். நல்லாட்சி அரசாங்கத்திற்கு நாம் வாக்களித்தது எமது பூர்வீக நிலங்கள் விடுக்கப்படும் என்பதாலேயே. எமது பூர்வீக நிலங்கள் முழுமையாக விடுக்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கை. மாதிரிக் கிராமத்தில் எம்மால் தொடர்ந்து வசிக்க முடியாது. எம்மை மாதிரிக் கிராமத்தில் தொடர்ந்து தங்க வைத்திருப்பது எமது நாட்டிற்குள்ளேயே சிறைச்சாலையில் வாழ்வதற்கு ஒப்பானதாகும். எமது கிராமத்திற்கு ஜனாதிபதி வரும்போது இதனையே வெளிப்படுத்துவோம். எமது கிராமத்திற்கு பேரூந்துப் பணிகள் இல்லை. முதன்மை வீதிகள் புனரமைக்கப்படவில்லை. மின்சார வசதிகள் இல்லை. இவை எல்லாம் பொறுத்துக் கொண்டாலும் எமது வாக்குகளைப் பெற்ற ஜனாதிபதி வரும்போது கேப்பாப்புலவு கிராமத்தினை முழுமையாக விடுவிக்க வேண்டும் என்பதையே வலியுறுத்துவோம் என மக்கள் தெரிவித்தனர்.
முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசம் அகிம்சைப் போராட்டத்தை ஆரம்பிக்க உள்ளது:-
முல்லைத்தீவில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களின் சட்டவிரோத மீன்பிடியினை இல்லாதொழிக்கும் வகையில் அகிம்சை வழியிலான போராட்டத்தினை ஜனவரியில் மாதத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளை முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசம் மேற்கொண்டுள்ளது.
வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் முல்லைத்தீவு கடலில் சட்டவிரோதமான தொழிலில் ஈடுபடுவதன் காரணமாக முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் இது தொடர்பாக கடந்த ஆட்சிக் காலத்திலும் தற்போதைய ஆட்சியிலும் ஜனாதிபதி, பிரதமர், கடற்றொழில் அமைச்சர், வடமாகாண முதலமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள், மாவட்டச் செயலர் ஆகியோரிடமும் மனுக்கள் மூலமும் நேரிலும் முறைப்பாடு செய்து தகுந்த பலன்கள் கிடைக்காத நிலையில் நீதியினை நிலைநிறுத்தி அகிம்சை வழியான போராட்டத்தினை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளை முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கான ஆதரவினை சகலரிடமும் வேண்டி நிற்பதாக கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசம் அறிவித்துள்ளது.
கிளிநொச்சி அக்கராயனில் தொடரும் மணல் அகழ்விற்கு கிராம அபிவிருத்திச் சங்கங்களின் பலவீனமான செயற்பாடுகளே காரணம் என கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது:-
கிளிநொச்சி அக்கராயனில் தொடரும் மணல் அகழ்விற்கு கிராம அபிவிருத்திச் சங்கங்களின் பலவீனமான செயற்பாடுகளே காரணமாக அமைந்துள்ளதாக பொது மக்களினால் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுகின்றது. மணல் கொண்டு செல்லப்படுவது தொடர்பாக பிரதேச செயலர், மாவட்டச் செயலருக்கு தகவல்கள் வழங்கப்படுவதில்லை. நேரில் சென்று மணல் அகழ்வின் தாக்கம் தொடர்பாக தெரியப்படுத்துவதில்லை. கிராம அபிவிருத்திச் சங்கங்கள் தங்களிடையே கலந்துரையாடல்களை மேற்கொண்டு மணல் அகழ்வின் நிலைப்பாடு தொடர்பாக அறிக்கைகள் தயாரித்து அதனை பிரதேச செயலரிடமோ அல்லது மாவட்டச் செயலரிடமோ நேரடியாக கொண்டு சென்று வழங்கியதாக தெரியவில்லை எனத் தெரிவிக்கும் பொது மக்கள் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களே நேரடியாக மணல் அகழ்வில் ஈடுபடுவதன் காரணமாக கிராம அபிவிருத்திச் சங்கங்களினால் மணல் அகழ்வினை கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதாக மக்களினால் தெரிவிக்கப்படுகின்றது. அக்கராயன் குளத்தின் கீழான ஏழரைக் கிலோமீற்றர் குடமுருட்டி வரையான ஆற்றுப்பகுதியில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு நடைபெறுவதன் காரணமாக எதிர்காலத்தில் நெற்செய்கைகள் பாதிக்கப்பட்டு குடிநீர் நெருக்கடி ஏற்பட்டு உவர் நீர் அக்கராயன் ஆறு முழுவதும் பரவக்கூடிய அபாய நிலை உருவாகி வருகின்றது. அக்கராயனில் மணல் அகழ்விற்கு எதிராக மக்கள் கண்டனக் கூட்டங்கள், விழிப்புச் செயற்பாடுகள் என்பன மேற்கொள்ளப்பட்ட போதிலும் மணல ;;அகழ்வு தொடர்ந்த வண்ணமுள்ளன. இதேவேளை மணல் அகழ்விற்கு அனுமதிகள் வழங்கும் அதிகாரிகள் தொடர்பாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். வீட்டுத்திட்டங்களுக்கு மணலைப் பெற்றுக் கொள்ளாத முடியாத நிலையில் எமது மணல் வளம் வெளியிடங்களுக்குக் கொண்டு செல்வதற்கு அதிகாரிகளே காரணமாக உள்ளதாகவும் அதேவேளை களவாக மணல் அகழ்வில் ஈடுபடுவோருக்கும் அக்கராயன் பொலிசாருக்கும் நெருங்கிய தொடர்புகள் இருப்பதாகவும் இதன் காரணமாகவே மணல் அகழ்வு தொடர்ந்து நடைபெறுவதாகவும் மக்களினால் தெரிவிக்கின்றது.
கிளிநொச்சி கல்வி வலயத்தில் ஏற்பட்டுள்ள ஆசிரிய நெருக்கடி பாடசாலைகளை நடாத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது:
கிளிநொச்சி கல்வி வலயத்தில் ஏற்பட்டுள்ள ஆசிரிய நெருக்கடி பாடசாலைகளை நடாத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் கந்தசாமி முருகவேல் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது. கிளிநொச்சி வலயத்தில் இருந்து 98 ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்றுச் சென்றனர். 14 ஆசிரியர்கள் வலயத்திற்கு புதிதாக வருவார்கள் என்ற பெயர்ப்பட்டியல் கிடைத்த நிலையில் நேற்று 28.12.2016 வரை நான்கு ஆசிரியர்களே வலயத்திற்கு வந்துள்ளனர். இந்நிலையில் பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரிய நெருக்கடி காரணமாக பாடசாலைகளை இயக்குவதில் நெருக்கடி நிலைமை காணப்படுகின்றது. இந்நிலையில் ஆசிரிய ஆலோசகர்கள் பலர்; ஆசிரியர்களாக செல்லவுள்ளனர். ஆசிரியர்கள் சிலர் அதிபர்களாக பதவி ஏற்கவுள்ளனர். இந்நிலையில் வலயம் பலத்த நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளது எனவும் தெரிவித்தார். இதேவேளை 32,051 மாணவர்கள் கல்வி பயிலும் இக்கல்வி வலயத்தில் 112 பாடசாலைகளில் 104 பாடசாலைகள் இயங்குகின்றன. கிராமப் பாடசாலைகளிலே கூடுதலாக ஆசிரியர்கள் நெருக்கடி காணப்படுகின்றது. அக்கராயன், ஜெயபுரம், பூநகரி, கண்டாவளை பிரதேசப் பாடசாலைகளில் கூடுதலாக ஆசிரியர்கள் நெருக்கடி காணப்படுகின்றது.
கிளிநொச்சி கரியாலை நாகபடுவான் குளத்திற்கான நீர் வரவினை அதிகரிக்குமாறு விவசாயிகள் கோரிக்கை:-
கிளிநொச்சி கரியாலைநாகபடுவான் குளத்திற்கான நீர் வரவினை அதிகரிக்குமாறு இக்குளத்தின் கீழ் நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரியாலைநாகபடுவான் குளம் நீர் மட்டம் அதிகரிப்பதில் தாமதங்கள் காணப்படுகின்றது. காரணம் இக்குளத்திற்கு நீர் வருகின்ற ஆற்றுப்படுக்கைகள் பிறவழியின் ஊடாக கடலினைச் சென்றடைவதன் காரணமாக குளத்தின் நீர் மட்டம் அதிகரிக்கும் வேகம் குறைந்து காணப்படுகின்றது. மழை காலத்தில் சில ஆற்றுப்படுக்கைகளின் குறுக்கே மண் மூடைகளை அடுக்கிய போதிலும் ஆற்றினை முழுமையாக திசை திருப்ப முடியாத நிலைமை காணப்படுகின்ற நிலையில் ஆற்றுப்படுக்கைகளை குளத்திற்கு நீர் வரக்கூடிய வகையில் மாற்றியமைக்குமாறும் இதேவேளை வன்னேரிக்குளம், பன்றிவெட்டிக்குளம், தேவன்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள இணைப்பு வேலைகளை மேற்கொள்வதன் மூலம் பெருமளவு நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ள முடியுமெனவும் விவசாயிகளினால் தெரிவிக்கப்படுகின்றது.