குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் முதுகில் குத்தி ஆட்சியை கைப்பற்றப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டு பயணமொன்றை மேற்கொண்டதன் பின்னர் நாட்டின் ஆட்சியை கவிழ்க்கும் தேவை தமக்கு கிடையாது எனவும் பிரதமர் ரணில் விக்கரமசிங்க நாட்டில் இருக்கும் போதே ஆட்சியை கவிழ்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மீளவும் ஆட்சி கவிழ்ப்பு பற்றி பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
அரசாங்கம் சர்வாதிகார போக்கில் ஆட்சி நடத்தி வருகின்றது எனவும், மக்கள் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ள அவர் நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் இந்த நிலைமையினால் அரசாங்கத்திற்கு எதிராக அனைத்து சக்திகளும் ஒன்றிணைந்து அணி திரண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டில் அரசாங்கத்தை கவிழ்ப்பதாக மஹிந்த ராஜபக்ஸ அண்மையில் சர்வதேச ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து தாம் சுவிட்சர்லாந்து செல்ல உள்ளதாகவும் அந்த தருணத்தில் முடிந்தால் ஆட்சியை கவிழ்த்துக் கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க சவால் விடுத்திருந்தார். இந்த சவால் குறித்து பதிலளிக்கும் வகையில் நேற்றைய தினம் மீளவும் மஹிந்த ராஜபக்ஸ கருத்து வெளியிட்டுள்ளார்.