குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஒப்பந்த அடிப்படையில் நல்லாட்சி அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அங்கம் வகிக்கும் என கனிய வள அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிப்பது தொடர்பில் ஏற்கனவே சுதந்திரக் கட்சி இரண்டாண்டு கால ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டுள்ளது எனவும் ஒப்பந்த காலத்தின் பின்னர் நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதாக இல்லையா என்பது குறித்து, தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கனிவள அமைச்சில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டை ஆபத்தில் ஆழ்த்தும் எந்தவொரு தீர்மானத்திற்கும் கொள்கைக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒத்துழைப்பு வழங்காது எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கட்சியையோ அல்லது அதன் கொள்கைகளையோ காட்டிக் கொடுக்கும் வகையில் செயற்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தில் சுதந்திரக் கட்சி தனது கட்சி அரசியலையும் ஐக்கிய தேசியக் கட்சி தனது கட்சி அரசியலையும் மேற்கொண்டு வருவதாகவும் இதனால் ஆட்சிக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.