சர்வதேச நீதிபதி நியமிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டுமென நல்லிணக்க பொறிமுறை தொடர்பான மக்கள் கருத்தறியும் செயலணி பரிந்துரை செய்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் பொறிமுறையில் கலப்பு நீதிமன்றம் அமைக்கப்படுவது அவசியமானதென்றும் அதன் ஒவ்வொரு அமர்விலும் பெரும்பான்மை தேசிய நீதிபதிகளுடன் குறைந்தபட்சம் ஒரு சர்வதேச நீதிபதி நியமிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டுமென்றும் நல்லிணக்க பொறிமுறை தொடர்பான மக்கள் கருத்தறியும் செயலணி அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.
மேலும் நீதிபதிகளின் தெரிவு தொடர்பில் சிவில் சமூக அமைப்புகளின் ஆலோசனையை பெற்று, அரசியலமைப்பு பேரவையால் அவர்கள் நியமிக்கப்பட வேண்டுமென்றும் சர்வதேச நீதிபதிகளை பொறுத்தவரை ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தின் ஆலோசனை பெறப்பட்டு சகல விடயங்களும் மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று வெளியிட்டு வைக்கப்பட்ட நல்லிணக்க செயலணியின் இறுதி அறிக்கையிலேயே இவ்விடயங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
நீதிபதிகள், விசாரணையாளர்களை பொறுத்தவரையில் சகல இன பிரதிநிதிகளும் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதோடு, யுத்தக் குற்றம், மனித உரிமை மீறல்கள், பாலியல் துஷ்பிரயோகம் போன்ற குற்றங்களுக்கு மன்னிப்பு வழங்குவது சட்டவிரோதமானதென தெரிவித்துள்ள நல்லிணக்க செயலணி, மனித குலத்திற்கு எதிரான குறித்த குற்றங்களுக்கு விசேட நீதிமன்ற ஆணை வழங்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளது.