குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் செயலாளா் க. கம்சநாதனின் முறைப்பாட்டையடுத்து பொது நினைவுச் சமாதி அமைத்த ஆறுபேரை வெள்ளிக்கிழமை நாளை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கிளிநொச்சி பொலீஸாா் தெரிவித்துள்ளனா்.
இன்று வியாழன் முற்பகல் மாவீரர்களின் உறவினா்கள் முன்னாள் போராளிகள் என பலா் ஒன்று சோ்ந்து பொது நினைவுச் சமாதி ஒன்றை அமைக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்தனா். இவர்கள் இன்று வியாழக்கிழமை மாலை நான்கு முப்பது மணிக்கு கிளிநொச்சி காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு நாளை வெள்ளிக்கிழமை காலை கிளிநொச்சி நீதி நீதவான் நீதிமன்றுக்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளனா்..
இது தொடா்பாக கரைச்சி பிரதேச சபையின் செயலாளா் க.கம்சநாதனிடம் வினவிய போது
சுடலைகளில் ஏதேனும் பணிகளை மேற்கொள்வதாக இருந்தால் பிரதேச சபையின் அனுமதி பெறப்படல் வேண்டும் என்றும் அவ்வாறு எந்த அனுமதியும் பெறப்படாது பணிகள் இடம்பெற்றமையினால் அதனை நிறுத்த கோரியதாகவும் ஆனால் பணியில் ஈடுப்பட்டவா்கள் நிறுத்தாது தனது கடமைகளையும் செய்யவிடாது இடையூறு ஏற்படுத்தினர் எனவும் எனவேதான் முறைபாடு செய்தேன் எனத் தெரிவித்தாா்.
இது தொடா்பாக ஏற்பாட்டாளா்கள் கருத்து தெரிவித்த போது கடந்த நவம்பா் 27 ஆம் திகதி மாவீரா் நாள் நிகழ்வு நடந்த போது இந்தச் செயலாளரும் அவரது சட்டங்களும் எங்கு சென்றது எனக் கேள்வி எழுப்பியதோடு, துயிலுமில்லம் அமைந்துள்ள குறித்த கனகபுரம் காணி தனியாா் காணியும் என்றும் அதற்கும் பிரதேச சபைக்கும் தொடா்பில்லை என்றும் குறிப்பிட்டதோடு ஒரு தமிழன் துயிமில்லத்தை சுடலை என்று குறிப்பிட்டதும் இதுதான் முதல் தடவை என்றும் தெரிவித்தனா்.