நல்லிணக்க பொறிமுறை குறித்து அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட செயலணியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள், நாட்டின் நீதித்துறையானது நம்பகத்தன்மை அற்றதென்பதை தெளிவாக எடுத்துக்காட்டுவதாக சிவில் சமூக மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்
பிரதமர் ரணிலின் நேரடி ஆலோசனையின் பேரில் நியமிக்கப்பட்ட குறித்த செயலணியின் அறிக்கை கடந்த செவ்வாயன்று ஜனாதிபதி செயலகத்தில் வெளியிடப்பட்டது.
இதில், சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றத்தின் தேவை, பாதிக்கப்பட்டோருக்கு நீதி மற்றும் இழப்பீடு என்பவற்றை வழங்குவதற்கு முன்னெடுக்கப்படவேண்டிய பல்வேறு விடயங்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள போதே சிவில் சமூக மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த செயலணியில் மூவின பிரதிநிதிகளும் உள்ளடக்கப்பட்டிருந்ததோடு, அதிலுள்ள பரிந்துரைகளை செயலணியின் மூவின பிரதிநிதிகளும் ஏற்றுக்கொண்டு தமது கருத்துக்களையும் முன்வைத்துள்ளனர். அந்தவகையில் குறித்த அறிக்கை காத்திரமானதென்றும் அதிலுள்ள பரிந்துரைகளை அரசாங்கம் உள்வாங்க வேண்டும் என்றும் அவர்கள்; வலியுறுத்தியுள்ளனர்.
எனினும், அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட பல ஆணைக்குழுக்கள் மற்றும் செயலணிகளின் அறிக்கைகளும் இதுவும் ஒன்றென குறிப்பிட்டுள்ள அரசாங்கம், பரிந்துரைகளை ஆராய்ந்து முடியுமான விடயங்களை மாத்திரமே செயற்படுத்துவோம் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.