குளோபல் தமிழ் செய்தியாளர்
மாகாண ரீதியாக ஆசிரியர்களை நியமனம் செய்யும்போது தாம் பாதிக்கப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர். போரினால் கடுமையாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட பட்டாதரிகள் இதில் மேலும் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களுக்கு முதலில் அம்மாவட்டத்தில் சித்தியடைந்த மாணவர்களை மாவட்ட கோட்டா அடிப்படையில் நியமித்த பின்னர், ஏனைய வெற்றிடங்களுக்கு வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களை நியமிக்குமாறும் பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாகாண கோட்டா அல்லது வெட்டுப்புள்ளியினால் தமது மாவட்டத்தை சேர்ந்த அதிகமான பட்டதாரிகள் வேலை வாய்ப்பை இழப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். போரால் பாதிக்கப்பட்ட நிலையில் தமது மாவட்டத்தின் கல்வி நிலை பின்தங்கியிருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
மாவட்டத்தின் கல்வி நிலையின் அடிப்படையிலேயே வெட்டுப்புள்ளிகள் தீர்மானிக்கப்படுவதாகவும் தமது மாவட்டத்தின்கல்வி மற்றும் பொருளாதார நிலை குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் குறிப்பிட்டனர்.
கடந்த முறையும் மாவட்ட கோட்டாவின் அடிப்படையில் வெட்டுப்புள்ளிகள் அறிவிக்கப்பட்டே ஆசிரியர்கள் நிமியக்கப்பட்டதாக தெரிவித்த அவர்கள், இம்முறையும் அதனையே பின்பற்றி ஆசிரியர் நியமனங்களை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.