தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை கொண்டுவரும் என தமிழ் மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் புதிய அரசியலைமைப்பு கலந்துரையாடல் தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டுக்கொண்டே போகிறது. அனைத்து கட்சி பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய வழிகாட்டல் குழுவில், தயாரிக்கப்பட்ட இடைக்கால வரைபு பற்றிய தத்தமது நிலைப்பாடுகளை முன் வைப்பதில் கட்சிகள் இடையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இனிமேலும் இதை தள்ளி வைக்க முடியாது.
குறிப்பாக அதிகாரப்பகிர்வு, தேர்தல் முறைமை, நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஆகியவை தொடர்பாக உங்கள் நிலைப்பாடுகளை வழிகாட்டல் குழுவுக்கு அறிவியுங்கள். பெரும்பான்மை கட்சிகளின் அரசியல் இழுபறிகளுக்கு தமிழ் பேசும் மக்கள் இனியும் பலிக்கடா ஆக முடியாது. புதிய அரசியலைமைப்புக்கு தயாரில்லை என்றால் அரசியலமைப்பு பேரவையை கலைத்து விட்டு இனப்பிரச்சினை தீர்வுக்கு எதுவும் தர தயாரில்லை என அகில உலகத்துக்கும் அறிவித்து விடுங்கள். இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு விடும் என்று தமிழ் மக்களை இனிமேலும் நம்ப வைத்து இழுபறிப்பட இடமளிக்க முடியாது.
இதற்கு நாம் பங்காளிகளாக இருக்கவும் முடியாது என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னனி, பொது எதிரணி ஆகிய கட்சிகளின் தலைவர்களுக்கு தனித்தனியாக அனுப்பி வைத்துள்ள கடிதங்களில் கூறியுள்ளார்.
இவற்றில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
அதிகாரப்பகிர்வு, தேர்தல் முறைமை, நிறைவேற்று ஜனாதிபதி முறைமை, நாட்டின் ஆட்புல ஒருமைப்பாடு, மொழியுரிமை, மத உரிமை, தேசியகீதம் ஆகிய ஏழு விடயங்கள் தொடர்பாக, வழிகாட்டல் குழுவில் இப்டம்பெற்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளுடன் தமிழ் முற்போக்கு கூட்டணி கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளது. இந்த நான்கு கட்சிகளும் இணைந்து தயாரிக்கும் ஒரு கூட்டு அறிக்கையை, வழிகாட்டல் குழுவுக்கு சமர்பிக்க நாம் முடிவு செய்துள்ளோம். இது தொடர்பிலான எங்கள் வரைபு தயாரிக்கப்பட்டு நான்கு கட்சிகள் மத்தியிலும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. எமது இறுதி அறிக்கை, அடுத்த வழிகாட்டல் குழு கூட்டத்துக்கு சமர்பிக்கப்படும்.
கடைசியாக நடைபெற்ற வழிகாட்டல் குழுவின் முடிவின்படி, இம்மாதம் 9,10,11ம் திகதிகளில் நடைபெறவிருந்த அரசியலமைப்பு பேரவை விவாதங்கள் ஒத்திவைக்கப்பட்டன. அத்துடன் பெப்ரவரி மாதம் முதல் வாரத்துக்குள் அனைத்து கட்சிகளும் தத்தம் நிலைப்பாடுகளை அறிவிக்க உடன்பாடு ஏற்பட்டது. எனவே இந்த காலகட்டத்துக்குள் உங்கள் நிலைப்பாடுகள் வழிகாட்டல் குழுவுக்கு சமர்பிக்கப்படும் என எதிர்பார்க்கிறேன்.