குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மக்கள் அரசாங்கமொன்றை உருவாக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். முகநூலில் மக்களின் கேள்விகளுக்கு இன்றைய தினம் பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து அணி திரண்டால் எதிர்காலத்தில் மக்கள் அரசாங்கமொன்றை உருவாக்க முடியும் எனவும் ஹம்பாந்தோட்டையில் நடத்தப்பட்டு வரும் போராட்டம் அபிவிருத்திக்கோ அல்லது சீனாவிற்கோ எதிரானதல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் சொத்துக்கள் விற்பனை செய்யப்படக் கூடாது என்பதே தமது நோக்கம் எனவும் எமது மூதாதையரின் காணி நிலங்களை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்ய இடமளிக்கப்பட முடியாது எனவும் குறிப்பிட்டுள்ள நாமல் தமக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களும் அரசியல் நோக்கங்களினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வடக்கில் நிறுத்தப்பட்ட அனைத்து அபிவிருத்தி திட்டங்களும் கட்டாயமாக மீண்டும் தொடங்கப்பட வேண்டும் எனவும் முக்கியமாக முன்னாள் போராளிகளுக்கான கடன் திட்டங்களை அரசாங்கம் நிறுத்தியது கண்டிக்கத்தக்கது எனவும் தாம் ஆட்சிப்பீடம் ஏறியதும் நிறுத்தப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களிற்கான அனைத்து செயல்திட்டங்களும் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.