குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எதற்காக அண்மையில் சீனாவிற்கு பயணம் செய்தார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். அண்மையில் எதற்காக பயணம் செய்தார் என்பதனை முடிந்தால் மஹிந்த அம்பலப்படுத்தட்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சீனாவிற்கு சென்று இலங்கையில் முதலீடு செய்யுமாறு கோரிய மஹிந்த தற்போது சீன முதலீடுகளை எதிர்த்து வருவதன் மர்மம் புரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் முதலீடு செய்ய இணங்கியமைக்காக சீன ஜனாதிபதி Xi Jinping க்கு நாட்டு மக்கள் நன்றி கூற வேண்டுமென தெரிவித்துள்ள அவர் இலங்கையில் துறைமுகம் மற்றும் விமான நிலையம் அமைப்பதற்கு முதலீடு செய்த சீனா தற்போது முதலீட்டு வலயமொன்றை உருவாக்கவும் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். சீனா மட்டுமன்றி ஏனைய நாடுகளின் முதலீடுகளை பெற்றுக்கொள்ளவும் அரசாங்கம் முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.