Home இலங்கை ஏமார்ந்து போன முதல் தலைவரின் நினைவு நேற்று! (09.01.17) –

ஏமார்ந்து போன முதல் தலைவரின் நினைவு நேற்று! (09.01.17) –

by admin

தமிழருக்கான தனி அரசியற் பாதையின் ஆரம்பப் புள்ளி அவரே . எஸ் எம் வரதராஜன் -நியூசீலாந்து :-


சிங்களத் தலைவர்களை நம்பி ஏமார்ந்து முதன் முதல் “ஏமார்ந்த தமிழ்த் தலைமை” என்ற சாதனையை நிலைநாட்டிய சேர் பொன்னம்பலம் அருணாசலத்தின் நினைவு நாள் நேற்றாகும்.

(பிறப்பு  செப்டம்பர் 141853 – ஜனவரி 91924, மறைவு  சனவரி 9, 1924 :அகவை 70))

இலங்கைக்குச் சுதந்திரம் கிடைப்பதில் முதன்மை வகித்த இவர் தமிழர் என்பதால் வழமைபோலவே முக்கியத்துவம் இல்லாமல் இருக்கிறார்.

தமிழருக்கு என்று ஒரு அரசியல் பாதை தேவை என்பதன் தொடக்கப்புள்ளி இவர்தான் என்பதை வரலாறு என்றும் சொல்லி நிற்கும்.

பொன்னம்பலம் அருணாசலம் யாழ்ப்பாணம் , மானிப்பாயைச் சேர்ந்த கேட் முதலியார் என அழைக்கப்பட்ட பொன்னம்பல முதலியாருக்கும் செல்லாச்சி அம்மையாருக்கும் (சேர் முத்து குமாரசுவாமியின் சகோதரி) மூன்றாவது மகனாக 1853 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி பிறந்தார். குமாரசாமி முதலியார், சேர். பொன். இராமநாதன் ஆகியோர் இவரது சகோதரர்கள்.

கொழும்பு றோயல் கல்லூரியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். 1870 இல் இராணி புலமைப்பரிசிலையும் பெற்று, லண்டன் கேம்பிரிச் பல்கலைக்கழகத்தின் கிறைஸ்ட் கல்லூரியில் கலைமாணிப் பட்டம் பெற்றார். மேலுமொரு புலமைப்பரிசிலைப் பெற்று கணிதத்திலும் புராதன இலக்கியத்திலும் சிறந்த சித்திகளைப் பெற்றார்.

இவரது மனைவியின் பெயர்: சுவர்ணம் நமசிவாயம் எட்டு பிள்ளைகள்: பத்மநாபன், அருணாசலம் மகாதேவா, அருணாசலம் இராமநாதன் ஆகிய ஆண்பிள்ளைகள், மகேஸ்வரி செகராசசிங்கம், மனோன்மணி பத்மநாதன், பத்மாவதி பரராஜசிங்கம், சிவானந்தம் தம்பையா, சுந்தரி நடராஜா ஆகிய ஐந்து பெண்பிள்ளைகள். இவர்களில் பத்மநாபன், மகேஸ்வரி, மனோன்மணி, பத்மாவதி ஆகியோர் அருணாசலம் மறைவதற்கு முன்பே இறந்து விட்டனர்.

இவர்களில் பத்மவதி பரராஜசிங்கத்தின் புதல்வியான திருமதி லலிதாம்பிகை சுவாமிநாதனின் புதல்வரே திரு தேவமனோகரன் சுவாமிநாதன் (D.M Swaminathan) ஆவார்.

சேர் பொன்னம்மபலம் அருணாசலத்தின் பெயரை இலங்கை அரசியலில் சொல்வதற்கு ஒருவராக இலங்கை அரசியலில் இன்றும் இருக்கிறார் .

இந்தச் சிங்களத் தலைவர்களிடம் ஏமாந்து 1920 களில்  இல் தமது அரசியல் நடவ்டிக்கைகளைத் துறந்து தமிழகம் சென்ற அதே அருணாசலத்தின் பூட்டனார் D.M சுவாமிநாதன்) அதே சிங்களத் தலைமையுடன் இன்றும் இணைந்து தமது அரசியற் செயற்பாடுகளை ஆற்றிவருகின்றமையும் வரலாற்றில் குறிக்கத்தக்க ஒன்று .

ஆனால்,   அவர் அதனை வெளிப்படையாகச் சொல்லிக்கொண்டே செயலாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பொன் அருணாசலம் அவர்கள் 1875 முதல் அரச சேவையில் பல பதவிகள் வகித்தாலும் 1887 இல் ஆட்பதிவுத் திணைக்கள நாயகமாகப் பணியாற்றிய முதலாவது தமிழரும் ஆவார்.

இவர் 1901 இல் வெளியிட்ட இலங்கைக்கு குடிசன மதிப்பீடு வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த தலை சிறந்த ஆய்வு எனப்படும்.

Royal Asiatic Society இன் இலங்கைக் கிளையின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட முதலாவது இலங்கையர் இவர். சைவ பரிபாலன சபையின் தலைவராகப் பல பணிகளை ஆற்றினார்.

University of Ceylon என்பது உருவாக அந்தச் சிந்தனையை உருவாக்கிய முதல் நபர் அருணாசலம் அவர்களே.

அதே University of Ceylon ஐ University of Sri Lanka என்று மாற்றி அவருடைய இனத்தைச் சேர்ந்த மாணவர்களை உள்ளே அனுமதிப்பதில் சிங்களத் தலைமை தரப்படுத்தலைக் கொண்டுவந்த வேளையில் நல்ல காலமாக அன்னார் இம் மண்ணில் இல்லாதது அவர் பெற்ற பேறே .

தொழிலாளர்களின் மேம்பாட்டிற்காக 1915 ஜனவரி 29 ஆம் திகதி சமூகச் சேவை சங்கத்தினை உருவாக்கி அதன் தலைவராகவும் பணியாற்றினார்

1917 இல் இலங்கைத் தேசிய சபை (Ceylon National Association ) இனது அழைப்பில் அவர் ஆற்றிய மிக பிரசித்தி பெற்ற உரையான Our Political Needs இலங்கையின் சுதந்திர எழுச்சிக்கு அனைவரையும் உணர்ச்சி பெறச் செய்தது .

1919 டிசம்பர் 11 இல் அருணாசலத்தின் முயற்சியினால் இலங்கையின் முதலாவது தேசிய இயக்கமான இலங்கைத் தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. அதன் முதலாவது தலைவராகவும் 1919 முதல் 1922 வரை பொன்னம்பலம் அருணாசலமே ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். தமிழர்களை தேசிய காங்கிரசுடன் இணைப்பதற்கான பேச்சுவார்த்தையில் இவரே நடுவராகத் தொழிற்பட்டார். எழுத்து வடிவில் ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டது.

1921 ஆம் ஆண்டு மானிங் அரசியல் சீர்திருத்தத்தின் அடிப்படையிலான தேர்தலில் கொழும்பு தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை சேர். ஜேம்ஸ் பீரிஸ்,சமரவிக்கிரம போன்ற சிங்கள தலைவர்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் இலங்கைத் தேசிய காங்கிரசிலிருந்து வெளியேறினார்.

1921 ஆகஸ்டில் தமிழர் அடையாள அரசியலை நிலைநிறுத்தும் வகையில் தமிழர் மகாஜன சபையினை உருவாக்கினார். அதன் தலைமைப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.

தமிழருக்கான தனியான அரசியற் பாதையை தொடங்கிவிட்ட முதலாவது தலைவர் இவரே!.

இவருக்குப் பின்னர் வந்தவர்களில்  தலைவர் சி சுந்தரலிங்கம் சிங்களச் சட்டம் 1956 இல் கொண்டுவரப்பட்ட பொழுது ” தமிழ் மக்களே இனி ஒருபோதும் சிங்களத் தலைவர்களை நம்பாதீர்கள் .இவர்கள் எங்களுக்கு கழுத்தறுத்துவிட்டார்கள் வெகுவிரைவில் தமிழ் இலங்கை என்று ஒன்றை உருவாகும்! ” என்றார்.

எனினும்   1956 இல் தந்தை செல்வா பண் டாரநாயக்கவை நம்பி ஏமார்ந்தார்.

பின்னர் 1965 இல் டட்லி யுடன் செய்த ஒப்பந்தத்தை டட்லி செல்வாவுக்குச் சொல்லாமலே கிழித்தெறிந்தமை வரலாறாகும்.

1956 இல் மொழிச்சட்டத்தை எதிர்த்து தமிழர்களுக்கு உரிமை வழங்கப்படவேண்டும் என்ற சிங்கள இடதுசாரித் தலைவர்கள் கூட 1965 இல் டட்லி செல்வாவுடன் உடன்பாடு செய்கையில் டட்லியின் வயிற்றில் தோசையும் மசாலா வடையும் என்று பகிடி பண்ணினர் .

இதனை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால்..மலையக மக்கள் மீது கண்ணீர் விடும் “இன்றய சிங்கள ” இட்துடசாரிகள் பற்றி மலையக மக்கள் ஒரு படத்தை எடுத்து வைப்பதற்காகவே.

1977 இல் ஜே ஆர் அரசு தமிழ்த்தரப்புடன் பேசிக் கொண்டுவந்த மாவட்ட சபைகள் முறையை மாவட்டசபைத் தேர்தலைக் குழப்பி இளையவர்கள் நடவடிக்கையை அழிப்பதிலேயே கவனத்தைச் செலுத்தி காலத்தைக் கடத்தினர்.

1987 இல் இந்திய அரசின் நடவடிக்கையால் ஏற்படுத்தப்பட்ட மாகாணசபைகளைக் கூட செயற்படுத்துவதற்கு பல மாதங்கள் எடுத்தன.

இத்தகைய அனுபவங்களின் பின்னர் தமிழ் மக்களின் தலைவர் சமபந்தன் எந்தவிதமான ஒப்பந்தமும் இன்றி சிங்களத் தலைமையை நம்பியுள்ளார். அந்த நம்பிக்கை மீது அவர் உறுதியாக உள்ளார்.

அவருக்கும் எதிர்காலத்தில் சேர் பொன்னம்பலம் அருணாசலம் அவர்களை போல அஞ்சல் முத்திரை ஒன்று வெளியிடப்படலாம். ஆனால் அவ்வேளையில் அஞ்சல் சேவை என்று ஒன்று இருக்குமோ என்ன?

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More