சாதி மாறி திருமணம் செய்தவரின் சகோதரியைக் கொலைசெய்த தம்பதிக்கு திருநெல்வேலி மாவட்ட விசாரணை நீதிமன்றம் தூக்குதண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
திருநெல்வேலி வண்ணார்பேட்டையைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவர், தச்சநல்லூரைச் சேர்ந்த காவிரி என்ற பெண்ணை, கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டார்.
தனது மகளைத் தேடி, விஸ்வநாதனின் வீட்டிற்குச் சென்ற காவிரியின் தந்தை சங்கரநாராயணனும் தாய் செல்லம்மாளும், அங்கு இருந்த விஸ்வநாதனின் சகோதரி கல்பனாவிடம் இது தொடர்பாக விசாரித்தனர். அதன் பின் சங்கரநாராயணனும் செல்லம்மாளும், கர்ப்பிணிப் பெண்ணான கல்பனாவை வெட்டிக் கொலைசெய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
விஸ்வநாதன் தலித் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால், கடந்த ஆண்டு மே 13ஆம் திகதி, இடம்பெற்ற இந்தக் கொலை ஒரு ஆணவக் கொலையாக கருதப்பட்டது.
இந்த விவகாரத்தில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது கொலை வழக்கோடு தீண்டாமை வன்கொடுமை குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டு, திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவந்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இரண்டு பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கிய நீதிபதி அப்துல் காதர், ஆயுள் தண்டனையோடு, தீண்டாமை வன்கொடுமை வழக்கில் 11 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கித் தீர்ப்பளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நடந்த ஆணவக் கொலை தொடர்பான வழக்குகளில் முதன் முறையாக தூக்குத் தண்டனை வழங்கப்பட்டிருப்பதாக தலித் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆணவக் கொலை, சாதி, திருமணம், தூக்கு தண்டனை, திருநெல்வேலி